சென்னை திருவல்லிக்கேணியில் 3.50 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் அதிரடியாக மீட்பு

post-img
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 560 சதுர அடி பரப்பிலான வணிக மனை மற்றும் 2,886 சதுரடி பரப்பிலான குடியிருப்பு மனை என மொத்தம் 3,446 சதுரடி சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்தன. அந்த சொத்துக்களை காவல்துறை உதவியுடன் அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக மீட்டனர். இதன் சந்தை மதிப்பு சுமார் 3.50 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் கோவில் நிலத்திலோ அல்லது நீர்நிலையை ஒட்டிய ஆக்கிரமிப்பு நிலங்களை வாங்கி குடியேற கூடாது. பத்திரப்பதிவு செய்து கொள்ள முடியும். பட்டா கிடைக்காது என்று கூறப்படும் எந்த நிலத்தையும் வாங்கக்கூடாது. குறிப்பாக கோவில் நிலம் என்றால், அறநிலையத்துறை நிச்சயம் என்றாவது ஒரு நாள் நடவடிக்கை எடுக்கும். அதேபோல் நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்களிடம் நிலம் வாங்கினாலும் சிக்கல் ஏற்படும்- மடிப்பாக்கம்,வேளச்சேரி, பள்ளக்கரணை உள்பட பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளில் பலர் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். அவர்களில் பலருக்கு பட்டா இல்லை. இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "சென்னை, திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 560 சதுர அடி பரப்பிலான வணிக மனை மற்றும் 2,886 சதுரடி பரப்பிலான குடியிருப்பு மனை என மொத்தம் 3,446 சதுரடி சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்தன. இந்த சொத்துகள் உதவி ஆணையர் கி.பாரதிராஜா முன்னிலையில் வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டு உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.3.50 கோடி ஆகும். இந்த நிகழ்வின் போது வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) திருவேங்கடம், கோவில் செயல் அலுவலர் ரமேஷ், சரக ஆய்வர் உஷா, சிறப்புப் பணி செயல் அலுவலர்கள் குமரேசன், செந்தில், தினகரன், நித்யானந்தம், சுசில்குமார் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.முன்னதாக கடந்த 10 நாட்கள் முன்பு இதேபோல் திருவல்லிக்கேணி பகுதியில் கோயில் சொத்து மீட்கப்பட்டது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சென்னை, திருவல்லிக்கேணி, ராஜா அனுமந்த தெருவில் உள்ள 5 ஆயிரத்து 305 சதுரஅடி பரப்பளவுள்ள காலிமனை காமகலா காமேசுவரர் கோவிலுக்குச் சொந்தமானது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து, உதவி கமிஷனர் கி.பாரதிராஜா முன்னிலையில், போலீசார் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் ஆகியோரின் உதவியுடன் காலி மனை மீட்கப்பட்டு, கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.7.5 கோடியாகும். இந்த நிகழ்வின்போது மயிலாப்பூர் சரக ஆய்வர் மணி, கோவில் செயல் அலுவலர் கங்காதேவி மற்றும் சிறப்பு பணி செயல் அலுவலர்கள் உடனிருந்தனர்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது. ஒரே வாரததில் சுமார் 11 கோடிக்கும் அதிகமான கோயில் சொத்துக்கள் திருவல்லிக்கேணியில் மீட்கப்பட்டுள்ளது.

Related Post