சென்னை: சன் நியூஸ் சேனலில் ‛கேள்வி களம்' நிகழ்ச்சியில் திமுக ஆதரவாளராக கருதப்படும் அரசியல் விமர்சகர் சூர்யா சேவியர், திரைப்பட இயக்குநர் பிரவீன் காந்தியை ‛அயோக்கிய பயலே வாய மூடுறா'' என கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
சென்னையில் நேற்று ‛எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கலந்துகொண்டார் . விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் விழாவை புறக்கணித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அதன் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார். ‛எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தை விஜய் வெளியிட முன்னாள் நீதிபதி சந்துரு பெற்ற கொண்டார். அதோடு இந்த விழாவில் ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜய் ஆகியோரின் பேச்சுக்கள் தமிழக அரசியலில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளன.
விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் திமுகவின் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சனம் செய்தனர். விஜய் பேசுகையில், ‛‛சமூக நீதி பேசும் இங்கு இருக்கும் அரசு.. வேங்கைவயல் விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுத்தது போலவே எனக்கு தெரியவில்லை. மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கட்சிகளை கைக்குள் போட்டுக்கொண்டு அவர்களை நம்பி இருமாப்புடன் 200 தொகுதிகளை வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை. நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026ல், மக்களே மைனஸாக்கி விடுவார்கள். மக்களே மைனஸாக்கி விடுவார்கள்'' என்றார்.
ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ‛‛பிறப்பால் முதலமைச்சர் உருவாக்கப்படக் கூடாது. மன்னராட்சி தான் இங்கு இருக்கிறது. மன்னராட்சியை கேள்வி கேட்டால், சங்கி என்று சொல்கிறார்கள். கொள்கைகளைப் பேசிக்கொண்டு ஆட்சிக்கு வந்து ஊழலை செய்யக்கூடிய நிலை இருக்க கூடாது. தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டார்கள்.2026ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும். பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராகக் கூடாது'' என்று கூறினார்.
இவர்கள் 2 பேரின் பேச்சு தான் தற்போது தமிழ்நாட்டு அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. அனைத்து சேனல்களிலும் இவர்களின் பேச்சை மையப்படுத்தி தான் விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் சன் நியூஸ் டிவியில் கேள்வி களம் என்ற பெயரில் விவாத நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பிரவீன் காந்தி, அரசியல் விமர்சகர் சூர்யா சேவியர் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் சூர்யா சேவியர் திமுக ஆதரவாளராக பலராலும் கருதப்படும் நிலையில் அவர் அரசியல் விமர்சகராக நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதேபோல் பிரவீன் காந்தி தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளராக அறியப்படும் சூழலில் திரைத்துறையை சார்ந்தவர் என்பதை காட்டும் வகையில் இயக்குநர் என்ற பெயருடன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் திடீரென்று இயக்குநர் பிரவீன் காந்தி மற்றும் அரசியல் விமர்சகர் சூர்யா சேவியர் ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதாவது சூர்யா சேவியர், ‛‛அரசியல் கட்சி காங்கிரஸ் என்ற அளவில் இல்லை. அந்த பார்ப்பணிய கருத்தியல் தான் தமிழ்நாட்டில் 1967 முதல் நீடித்து நிலைத்து நிற்கிறது. அதனால் தான் தமிழ்நாட்டில் பார்ப்பனிய ஆதிக்கம் அற்ற அமைச்சரவை அமைக்க முடிகிறது'' என்றார். அப்போது இயக்குநர் பிரவீன் காந்தி குறுக்கீட்டு, ‛‛அய்யா காமராஜ் (முன்னாள் முதல்வர்) அவர்கள் பார்ப்பணியரா? பக்தவச்சலம் அய்யா பார்ப்பணரா? ஏங்க.. தப்பா பேசுறீங்க.. ராஜாஜியுடன் கூட்டணி வைத்தவர்கள் நீங்கள்.. 1967 ல் ராஜாஜியுடன் கூட்டணி வைத்தவர்கள் நீங்கள்'' என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது டென்ஷனான சூர்யா சேவியர், ‛‛ஏய்.. ஏய்.. நீ வாய மூடுறா.. யார்ரா நீ.. நீ பாட்டுக்கு வந்து சவுண்ட் விட்டுட்டு இருக்க.. அயோக்கிய பயலே.. ஒவ்வொருவரையும் மிரட்டிகிட்டு இருக்க.. பிச்சிப்புடுவேன் பிச்சி.. அயோக்கிபயலே வாய மூடுறா.. இவன் யாருங்க இவன்.. எல்லோரையும் மிரட்டுறான். என்ன நினைச்சிகிட்டு இருக்க.. யாரு நாகரீகம் இல்லாமல் பேசுறா. ஸ்டூடியோவில் இருந்து கொண்டு அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கிறான். சின்ன பயல் என்கிறான். நேற்று வரை ரஜினிக்கு சொம்பு பிடிச்ச பய.. இன்னைக்கு வந்து விஜய்க்கு சொம்பு பிடிச்சிட்டு இருக்கிற பய.. யாராவது எலும்பு துண்டு போட்டால் அதனை வாங்கி கொண்டு பேசுற பய'' என்று வாய்க்கு வந்தபடி அவர் திட்டினார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage