பெங்களூர்: கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா (வயது 92) உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக பெங்களூரில் இன்று காலமானார். 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை கர்நாடகா முதல்வராகவும் பின்னர் மத்திய அமைச்சர், மகாராஷ்டிரா ஆளுநராகவும் பதவி வகித்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது 2023-ம் ஆண்டு எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டது. எஸ்.எம். கிருஷ்ணா மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரை தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைநகராக உருவாக்கியதில் முதன்மை பங்களித்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா.
கர்நாடகா அரசியலில் பல ஆண்டுகாலம் காங்கிரஸ் முகமாக இருந்தவர். கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் 1932-ம் ஆண்டு பிறந்த எஸ்.எம்.கிருஷ்ணா 1960களில் இறுதியில் இருந்தே தீவிர அரசியலில் களமாடியவர். நாடாளுமன்ற எம்பியாக பயணித்தவர். கர்நாடகா சட்டசபை சபாநாயகராகவும் பதவி வகித்தார்.
1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக இருந்தார். அப்போது காவிரி பிரச்சனை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கர்நாடகா முதல்வராக எஸ்.எம்.கிருஷ்ணா பதவி வகித்த காலத்தில்தான் சந்தனக் கடத்தல் வீரப்பனால், கர்நாடகா சினிமா சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. அப்போது தமிழக முதல்வராக கருணாநிதி பதவி வகித்தார். இரு மாநில முதல்வர்களும் ராஜ்குமாரை மீட்க இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்த போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்தார். மகாராஷ்டிரா ஆளுநராகவும் பதவி வகித்தார். இதனைத் தொடர்ந்து தீவிர அரசியலில் இருந்து விலகிய எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கடந்த ஆண்டு மத்திய பாஜக அரசு பத்ம விபூஷண் விருது வழங்கியது.
கடந்த சில மாதங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நலன் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.எம்.கிருஷ்ணா, இன்று அதிகாலை 3 மணிக்கு பெங்களூரில் காலமானார். எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Weather Data Source: Wettervorhersage 21 tage