திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் செந்தில் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர் பாஜகவினருக்கு நெருக்கம் என்று கூறப்படும் சூழலில் இந்த ரெய்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் நகைக்கடை, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வீடு, அலுவலகங்களிலும் வருமான வரிசோதனை நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அதேபோல் செங்கல்சூளையும் வைத்து தொழில் செய்து வருகிறார். இதுதவிர சீட்பண்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் சீட்பண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சத்திரப்பட்டியில் உள்ள செந்தில்குமார் இல்லத்தில் 6 காரில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த செந்தில் குமார் பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து தான் வருமான வரி சோதனை நடத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இத்தகைய சூழலில் இந்த ரெய்டு என்பது அதிக கவனம் பெற்றுள்ளது. இருப்பினும் அவரது வீட்டில் ரெய்டு நடத்தியதன் பின்னணி பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த இன்னும் சில தொழிலதிபர்களின் வீடு, அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் குழந்தைவேல் - முருகன் என்ற சகோதர்களுக்கு சொந்தமான தனபாக்கியம் நகை கடைகளில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் அவர்களின் பெட்ரோல் பங்க்குகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.
பொதுவாக வருமான வரி சோதனை என்பது குறிப்பிட்ட நிறுவனங்கள் வருமானத்தை மறைத்து முறைகேடு செய்திருக்கும் புகார் எழுந்தால் மட்டுமே மேற்கொள்ளப்படும். அந்த வகையில் திண்டுக்கல் தொழிலதிபர்கள் வீடு, அலுவலகங்களில் தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவர்கள் வருமான வரி செலுத்துவதில் ஏதேனும் முறைகேடு செய்துள்ளார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.