மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்கும் முன்பு ஷிண்டே செய்த காரியம்.. ஆளுநர் கொடுத்த ரியாக்‌ஷன்

post-img

மும்பை: மும்பை ஆசாத் மைதானத்தில் இன்று மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழா மிகவும் பிரமாண்டமாக நடந்தது. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வர்களாக சிவசேனாவின் ஏக்னாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரசின் அஜித்பவாரும் பதவியேற்றனர். முன்னதாக ஏக்னாத் ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்கும் போது ஆளுநர் பேசுவதற்குள் தனது பேச்சை தொடங்கினார். இதனால் அவர் எப்போது பேச்சை முடிப்பார் என்ற தொனியில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பார்த்துக்கொண்டிருந்தார்.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றது. பாஜக + ஏக்னாத் ஷிண்டே சிவசேனா + அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வரலாற்று வெற்றியினை பெற்றது. ஆனால் முதல்வர் பொறுப்பை யார் வகிப்பது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று இதற்கான இழுபறி முடிவுக்கு வந்தது.
இதன்படி மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்று பிரமாண்டமாக மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழா நடந்தது. மாலை 6 மணியளவில் மும்பை ஆசாத் மைதானத்தில் இந்த விழா நடந்தது. அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், திரை பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
மகாராஷ்டிரா மாநில முதல்வராக 3 வது முறையாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றுக்கொண்ட தேவேந்திர பட்னாவிஸ் பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து முன்னாள் முதல்வர் சிவசேனாவின் ஏக்னாத் ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதேபோல் தேசியவாத காங்கிரசின் அஜித்பவாரும் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். முன்னதாக ஏக்னாத் ஷின்டே பதவியேற்க வந்ததும் அரங்கத்தில் இருந்த சிவசேனா கட்சியினர் உற்சாகமக குரல் எழுப்பினர். கட்சியினர் சத்தம் குறைந்தததும் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்... நான்... என உச்சரிக்க முற்பட்டார். அதற்குள் ஏக்நாத் ஷிண்டே பேச தொடங்கினார்.
சிவசேனா கட்சியை நிறுவிய பால் தாக்கரேவை இந்துக்களின் மனதில் வாழும் பேரரசர் எனவும், மகாராஷ்டிரா மொழியில் உறுதிமொழியை வாசித்தும் பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியாரையும் புகழ்ந்து பேசினார். அதுவரையிலும் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், அவர் பேச்சை எப்போது முடிப்பார் என்ற தொனியில் காத்துக்கொண்டு இருந்தார். ஏக்நாத் ஷிண்டே தனது பேச்சை நிறைவு செய்தததும் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், அவருக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இன்று நடந்த மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழா ஒரு திருவிழாவை போல மிகவும் பிரம்மாண்ட நடந்தது. அங்கு பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் 3 வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். சிவசேனாவின் ஏக்னாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸின் அஜித்பவார் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த விழாவில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். குறிப்பாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜேபி நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி மற்றும் யோகி ஆதித்யநாத் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் என பல அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, ஷாருக் கான், ரன்பீர் கபூர், சஞ்சய் தத் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

Related Post