சென்னை: தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவரும் சென்னைக்கு வருவதாக இருந்தது. ஆனால் இவர்கள் வராதது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கில் மீண்டும் சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் இங்கே மீண்டும் இடைத்தேர்தல் நடப்பதற்கான அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில்,
காங்கிரஸ் சார்பாகே திருமகன் ஈவெரா 67,300 வாக்குகளை பெற்றார்
தமிழ் மாநில காங்கிரஸ் யுவராஜா 58,396 வாக்குகளை பெற்றார்
நாம் தமிழர் கட்சியின் கோமதி எஸ் 11,629 வாக்குகளை பெற்றார்
இந்த நிலையில் திருமகன் ஈவெரா மறைவு காரணமாக கடந்த வருடம் அங்கே இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணி காங்கிரசுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
நீண்ட காலத்திற்கு பின் அவர் சட்டசபைக்கு இதன் மூலம் திரும்பினார்.
காங்கிரஸ் சார்பாகே ஈவிகேஎஸ் இளங்கோவன் 110,156 வாக்குகளை பெற்றார்
அதிமுக சார்பாக கே எஸ் தென்னரசு 43,923 வாக்குகளை பெற்றார்
நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன் 10,827 வாக்குகளை பெற்றார்
அங்கே எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த வாரம் காலமானார். உடல் உபாதைகள், வயோதிகம் காரணமாக கடந்த சில வாரங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மிக மோசமானது. அவரின் உடல்நிலை தீவிரமாக மோசம் அடைய.. அவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
வரவில்லை: தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவரும் சென்னைக்கு வருவதாக இருந்தது.
இளங்கோவனின் குடும்பமும், தமிழக காங்கிரஸாரும் அவர்களது வருகையை எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி நேரத்தில் அவர்கள் வரவில்லை என்கிற தகவல் அறிந்து, கதர்சட்டையினர் வருத்தமடைந்தனர். இரங்கல் அறிவிப்பை கொடுத்ததோடு நின்று கொண்டார் ராகுல். இந்த நிலையில், சோனியா காந்தியின் தனிச் செயலாளராக இருந்த மாதவன், கேரளாவில் 17-ந்தேதி காலமானார்.
அவரது மறைவில் அதிர்ச்சியடைந்த சோனியா காந்தி, உடனடியாக கேரளாவுக்கு ராகுல் காந்தியை அனுப்பி வைத்தார். கேரளாவுக்கு வந்திருந்த ராகுல், மாதவன் உடலுக்கு மரியாதை செலுத்தினார். ராகுலின் கேரளா பயனத்தை அறிந்து. இளங்கோவனின் குடும்பமும் அவரது ஆதரவாளர்களும் ஆதங்கப்பட்டிருக்கிறார்கள். மலையாளி என்பதால் மாதவனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு ராகுல் காந்தியால் கேரளாவுக்கு செல்ல முடிகிறது. அதேசமயம், தமிழர் என்பதால் இளங்கோவனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. சோனியா குடும்பம் நினைத்திருந்தால், எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு சென்னைக்கு வந்திருக்க முடியும்.
ஆனால், அப்படி நினைக்கவில்லை. இத்தனைக்கும் சோனியா குடும்பத்தின் அரசியல் மற்றும் புகழ் மீது சின்னதாக ஒரு கீறல் விழுந்தாலும் இந்திய அளவில் முதல் குரல் கொடுப்பது இளங்கோவனாகத்தான் கடந்த காலங்களில் இருந்துள்ளார். அந்த நினைப்புக் கூட ராகுல்காந்திக்கு இல்லையே ? என்று ஆதங்கத்துடன் வருத்தப்படுகிறார்கள். இவர்களின் வருத்தமும் ஆதங்கமும் கட்சி தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாம். இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் இளங்கோவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல சென்னைக்கு வரவிருக்கிறாராம் ராகுல்காந்தி.