சென்னை: சென்னையில் பருவமழை மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனை சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் விரைவில் சாலை புனரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் அளித்த பேட்டியில், "சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சாலைகளை புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இப்போது வரை 50% பணிகள் நிறைவடைந்துள்ளன. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் புனரமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இப்பணிகள் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் நடைபெற்று வந்தன. தற்போது மீதம் உள்ள 50% பணிகள் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை சாலைகள் புனரமைக்கப்பட்டாலும் கூட, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட வேறு வேறு துறையை சார்ந்தவர்கள், புதியதாக போடப்பட்ட சாலையை தோண்டிவிடுவார்கள். எனவே புதிய சாலைகள் போட்டாலும் அது மக்களுக்கு பலன் கொடுக்காது. இந்த பிரச்சனை குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதாவது, "சாலை புனரமைப்பதற்கு முன்னர், அந்த பகுதியில் மற்ற அனைத்து துறையினரின் வேலைகள் முடிந்துவிட்டதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன் பின்னரே புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளனர்.
புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த அறிவிப்பு சென்னை வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சாலைகள்: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 471 பேருந்து தட சாலைகளும், 34,640 உட்புறச் சாலைகளும் உள்ளன. சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் 1919, பிரிவு 204-ன்படி பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்திற்காக பொதுத் தெருக்களை அவ்வப்போது சீர்செய்தும், மேம்படுத்தப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகிறது. சென்னை மாநகரத்தில் சுமார் 387.35 கி.மீ. நீளமுள்ள பேருந்து சாலைகளும், 5623 கி.மீ நீளமுள்ள உட்பிரிவு சாலைகளும் உள்ளன. இப்பேருந்து சாலைகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் பேருந்து சாலைகள் துறை மூலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
சாலைகள் பராமரிப்பு: பேருந்து சாலைகள் 5 வருடத்திற்கு ஒருமுறை பேவர் மூலம் மேம்படுத்தப்படுகிறது. சாலைகள் மேம்பாட்டில் நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக இந்திய தொழில் நுட்ப கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் போன்ற நிறுவனங்கள் உதவி வருகின்றன. பெரும்பாலும் சாலைகளை புனரமைக்கும் பணிகள் இரவில்தான் செய்யப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என்பதே இதற்கான காரணமாகும்.
சாலைகள் போடப்படும் விதம்: ஏற்கெனவே உள்ள சாலைகள் மீது மீண்டும் சாலைகள் அமைப்பதன் மூலம் அதன் உயரம் அதிகரிக்கும். இது குடியிருப்பு பகுதிகளை தாழ்வானதாக மாற்றிவிடும். எனவே, இந்த பிரச்சனையை சரி செய்ய புதியதாக சாலைகள் அமைக்கப்படும்போது, ஏற்கெனவே இருந்த சாலைகள் அகழ்ந்தெடுக்கப்படுகின்றன. 2008 முதல் பேருந்து சாலைகள் 40 மி.மீ வீதம் அகழ்ந்தெடுக்கப்படுகிறது. தவிர பஸ் ஸ்டாப், சிக்னல் உள்ள இடங்களில் 25 மி.மீ. கணத்தில் மேஸ்டிக் ஆஸ்பால்ட் மேற்பரப்பாக அமைக்கப்படுகின்றது.
ஏனெனில் பஸ் ஸ்டாப் மற்றும் சிக்னலில் கனரக வானங்கள் நிற்கும். இதனால் சாலையில் அதிக அழுத்தம் உருவாகும். நின்ற வாகனங்கள் மீண்டும் நகரும்போது அந்த இடத்தில் உராய்வு அதிகரித்து சேதம் ஏற்படும். இதை தவிர்க்கவே 25 மி.மீ. கணத்தில் மேஸ்டிக் ஆஸ்பால்ட் மேற்பரப்பாக அமைக்கப்படுகிறது. எது எப்படியோ, விரைவில் சாலைகள் புனரமைக்கப்படும் என்று வெளியான அறிவிப்பு சென்னை மக்களிடையே ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.