சென்னையில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு ஏன்? அமைச்சர் விளக்கம்!

post-img
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டது ஏன்? என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடையாற்றின் வெள்ள தணிப்புக்காக ஏரியிலிருந்து கடந்த 13 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் வினாடிக்கு 4,500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. நேற்று பிற்பகல் 12 மணி அளவில் வினாடிக்கு 6,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதிலம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல், புழல் ஏரியில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனம நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழல் ஏரியின் மிகைநீர் கால்வாயின் வெள்ள தணிப்புக்காக ஏரியிலிருந்து 13ம் தேதி காலை 9 மணி அளவில் வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று பிற்பகல் 12 மணி அளவில் வினாடிக்கு 1,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. எனவே, புழல் ஏரியின் நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 23.42 அடியாக உள்ள நிலையில், விநாடிக்கு 6000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. உபரி நீர், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் சாலைகளை மூழ்கடித்துள்ளது. அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் ஆற்றோரம் வசிக்கும் முதியவர்களுக்கு அரிசி, பெட்ஷீட் ஆகியவற்றை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் பேசிய அவர், "ஏரிகளை திறப்பதில் முதலமைச்சர் மிகவும் கவனமாக இருப்பதாகவும், கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சம்பவத்தை யாரும் மறக்க முடியாது என்றும் தெரிவித்தார். செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 24 அடி உயரத்தில், 23.42 அடி உயரம் தண்ணீர் நிரம்பியுள்ளது. ஏரிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வருகிறது. வருகிற 17 ஆம் தேதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் நீரை குறைக்காவிட்டால், கரை உடைந்து ஆபத்து ஏற்படக்கூடும். ஏரியில் நீரை குறைப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு 22 அடியாக குறைந்து விடும். 17 ஆம் தேதி பலத்த மழை வந்தாலும் 2 அடி உள்வாங்கி ஏரி குடிநீருக்கு நிரம்பி இருக்கும். இதனால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Related Post