எம்.ஜி.ஆரை தாக்கிய கண்ணதாசன்! ‘விழியே கதை எழுது’ பாட்டுப் பின்னால் நடந்த சண்டை

post-img
சென்னை: எம்.ஜி.ஆரின் நினைவு நாளை அதிமுகவினர் சிறப்பாக நினைவுகூர்ந்து வரும் நிலையில், அவருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே நடந்த ஒரு சுவாரஸ்யமான சண்டையைப் பற்றி தெரிந்து கொள்வோம். இன்றைக்கு உள்ள 2கே கிட்ஸ்கூட எம்.ஜி.ஆரை தெரிந்துவைத்திருக்கிறார்கள். அவரது படங்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் சொல்வார்கள். அவர் இறந்து பிறகும் அவர் தொடங்கிய அதிமுக தமிழ்நாட்டில் பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. 1978இல் வெளியான 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ தான் அவர் நடித்த கடைசி திரைப்படம். ’சதி லீலாவதி’ தொடங்கி ஆரம்பக் காலங்களில் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரை முழுமையான நாயகனாக மாற்றியது ’மருத நாட்டு இளவரசி’ தான். அடுத்து 'மந்திரி குமாரி’. இந்த இரண்டு படங்களுக்குக் கதைவசனம் எழுதியவர் மு.கருணாநிதி. திரைப்பட பணிகளுக்காக கோவையில் மு.கருணாநிதி தங்கி இருந்த காலங்களில் எம்.ஜி.ஆர். காங்கிரஸ்காரராகக் கதராடை அணிந்து காந்தியின் கொள்கை மீது பற்று கொண்டவராக இருந்தார். பின் மு.கருணாநிதி நட்பு ஏற்படவே அவர் திமுகவின் குரலாக ஒலிக்கத் தொடங்கி அண்ணாதுரையை தலைவராக ஏற்றார். ஆக, சினிமா உலகிலும் அரசியலிலும் நடிக்க வந்த காலம் முதல் எம்.ஜி.ஆர் லட்சியத்துடன் செயல்பட்டு வந்திருக்கிறார். இன்றைக்கு சினிமாவில் மார்க்கெட் குறைந்த பிறகு வேறுவழி இல்லாமல் அரசியலுக்கு வரும் நடிகரைப் போல அவர் இருக்கவில்லை. கோவையில் மு.கருணாநிதி தங்கி இருந்த காலகட்டத்தில்தான், அதாவது 1950களில் தான் கண்ணதாசனும் எம்.ஜி.ஆருக்கு அறிமுகமானார். அவர் அப்போது உலகம் அறியும் கண்ணதாசனாக இருக்கவில்லை. முத்தையா என்ற இயற்பெயரில் அறியப்பட்ட வந்த காலம். மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., கண்ணதாசன் ஆகிய மூவரும் திமுகவிலிருந்த காலகட்டத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். பின்னர் 1972க்குப் பின் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார் எம்.ஜி.ஆர். அதற்கு முன்பே ஈ.வெ.கி.சம்பத் திமுகவிலிருந்து 1960க்கு பின் வெளியேறிய போது அவருடன் கண்ணதாசன் போனார். ஆக, எம்.ஜி.ஆர் வெளியேற்றப்படுவதற்கு முன்பே அண்ணாதுரை தலைமையில் திமுக செயல்பட்டபோதே கண்ணதாசன் திமுகவைவிட்டு வெளியேறியவர். திமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். தனது அடுத்த கட்ட அரசியலை தொடங்குவதற்காக அனங்காபுத்தூர் ராமலிங்கம் தொடங்கி நடத்தி வந்த அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 'ஒரு தொண்டன் ஆரம்பித்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதாக’ அவர் அறிவித்தார். எம்.ஜி.ஆர் சினிமாவை விட்டு விலகுவதற்கு முந்தைய காலகட்டத்தில் மிகப் பெரிய பாடலாசிரியராக இருந்தவர் கண்ணதாசன். அவர் அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆருடன் முரண்பட்டார். ஆனாலும் அவர்கள் இருவருக்குள்ளாக எந்தளவுக்கு ஒரு அரசியல் நாகரிகம் இருந்தது என்பது பலருக்கும் தெரியாது. அவரது நினைவு நாளை நேற்று அதிமுகவினர் சிறப்பாக நினைவுகூர்ந்துள்ளனர். இந்நிலையில் 1974 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான 'உரிமைக்குரல்’ படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் பற்றி தெரிந்துகொள்வோம். இந்தச் சம்பவத்தை இப்படத்தின் இயக்குநர் ஸ்ரீதர் அவரது சுயசரிதையில் எழுதியுள்ளார். அதில் எம்.ஜி.ஆருடன் சுமுகமான உறவு கண்ணதாசனுக்கு இல்லை என்பது அறிந்தே தானும் எம்.எஸ்.வியும் அவரைப் பாட்டு எழுதவைத்தோம் என்பதைச் சுட்டிக்காட்டி உள்ளார். கண்ணதாசனும் 'விழியே கதை எழுது’ பாடலை எழுதிக் கொடுத்திருக்கிறார். பாடல் பதிவு முடிந்ததும் கேசட் எம்.ஜி.ஆருக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாட்டைக் கேட்டவர் நன்றாக உள்ளது என சொல்லிவிட்டு மெளரீஷியஸ் போய்விட்டார். அவர் ஊரில் இல்லாத நேரம் கண்ணதாசன் அவரை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதைப் படித்த ஸ்ரீதருக்கு தூக்கி வாரிப் போட்டுள்ளது. உடனே தகவலை எம்.ஜி.ஆருக்கு கொடுத்துள்ளார். அவர், அதனால் என்ன? அரசியல் வேறு சினிமா வேறு எனக் கூறிவிட்டார். தன்னை விமர்சித்த ஒருவரை தனது படத்திலிருந்து தூக்க வேண்டும் என எம்ஜிஆர் நினைக்கவில்லை என்று பெருமையாகத் தனது புத்தகத்தில் கூறியுள்ளார் ஸ்ரீதர். இன்றைக்குச் சின்ன வசனம் சினிமாவில் இருந்தாலே பல அரசியல் அழுத்தங்கள் வருகின்றன. படம் வெளியாகும் என்று பதறிப் போய் நடிகர்கள் நடுகின்றனர். அதை கமல்ஹாசன் முதல் விஜய் வரையான சர்ச்சைகளில் பார்த்திருக்கிறோம். அப்படி எம்.ஜி.ஆர் நடந்துகொள்ளவில்லை என்பதால் அவர் இன்றும் மக்களால் மதிக்கப்படுகிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post