சென்னை: இன்று டிசம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை கார்த்திகை மாத கடைசி வளர்ப்பிறை சுபமுகூர்த்த தினம் என்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக அதிகளவில் பத்திரங்கள் பதிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பதிவுத்துறை முக்கிய உத்தரவு ஒன்றினையும் பிறப்பித்திருக்கிறது.
தமிழக அரசின் மற்ற துறைகளை போலவே பத்திரப்பதிவு துறையும் ஆன்லைன்மயமாகிவிட்டது.. அதேபோல, ஒவ்வொரு வருடமும் வருவாய் இலக்கு நிர்ணயித்து, பத்திரப்பதிவு துறை செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த வருடமும், ரூ.25,000 கோடி வருவாய் இலக்கு நிர்ணயித்து, அதை அடைய முயற்சித்து வருகிறது.
இலக்கு நிர்ணயம்: இதனை முன்னிறுத்தியே பொதுமக்களுக்கு ஏராளமான அதிரடிகளையும், அறிவிப்புகளையும் பதிவுத்துறை வெளியிட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
வழக்கமாக, சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தினமும் 100 டோக்கன்கள் விநியோகிக்கப்படும். ஆனால் முகூர்த்த நாட்களில் மட்டும், பத்திரப்பதிவு சற்று அதிகமாகவே நடக்க வாய்ப்பிருக்கும் என்பதால், அந்த நாட்களில் கூடுதலாக டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சில விடுமுறை நாட்களிலும் கூடுதல் பத்திரப்பதிவை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வந்ததால், அதற்கேற்றபடியும் விசேஷ டோக்கன்கள் கூடுதலாக விநியோகிக்கப்படுகின்றன.
டிசம்பர் 5: இந்நிலையில், இன்று டிசம்பர் 5ம் தேதி வியாழக்கிழமை, இந்த மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதால் அதிகம்பேர் பத்திரப்பதிவு செய்ய விண்ணப்பித்திருக்கிறார்கள். எனவே, இன்றைய தினம் கூடுதல் டோக்கன்கள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள், கடந்த வாரமே கோரிக்கை ஒன்றை வைத்திருந்தனர். இதனை ஏற்ற தமிழக அரசு, பதிவுத்துறை, டிசம்பர் 5 ஆம் தேதி அன்று கூடுதல் டோக்கன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்த உத்தரவில் சொல்லப்பட்டுள்ளதாவது: "சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும், இதனால், அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
கூடுதல் டோக்கன்கள்: அந்த வகையில், கார்த்திகை மாதத்தின் சுபமுகூர்த்த தினமான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும். இதனல், கூடுதலாக முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.
இதனை ஏற்று கார்த்திகை மாதத்தின் சுபமுகூர்த்த தினமான 05.12.2024 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் 3.0: முன்னதாக பொதுமக்களின் பிரச்சனையையும், அலைச்சலையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு முக்கிய வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தது.. அதில், "பதிவுத்துறை மென்பொருளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை களைய ஆன்லைன் 3.0 திட்டத்தை கொண்டு வந்து விரைவில் சரி செய்ய வேண்டும்.
ஒருவேளை பதிவுத்துறையின் மென்பொருளில் நிலங்களின் வகைப்பாடு குறித்த தகவல்களையும், பழைய பட்டா - புதிய பட்டா, பழைய சர்வே எண் - புதிய உட்பிரிவு சர்வே எண் உள்ளிட்ட தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தால், இனி வரும் நாட்களில் அந்த பணியை விடுமுறை நாட்களில் பதிவேற்றம் செய்யும் வகையில் அறிவுறுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
Weather Data Source: Wettervorhersage 21 tage