அடுத்த பலி எப்போது? உடைந்து தொங்கும்1000 வீடுகள் ? பீதியில் பட்டினப்பாக்கம்

post-img

சென்னை: வீட்டைக் காலி செய்ய மக்கள் மறுப்பதாக அமைச்சர் அன்பரசன் தெரிவித்திருந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் வசித்துவரும் ஆயிரத்திற்கும் மேலான குடும்பங்களின் தினம் தினம் செத்துப் பிழைத்து வருவதாகக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
பெஞ்சல் புயல் மழை காரணமாகப் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் மேல்மாடம் இடிந்து விழுந்ததன் காரணமாக சையத் குலாப் என்பவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிதி உதவி வழங்க அமைச்சர் தா.மோ. அன்பரசன் உத்தரவிட்டிருந்தார்.

இது குறித்து அறிக்கை விட்டுள்ள அன்பரசன், "கடந்த 1966-1977 ஆம் ஆண்டு 6.20 ஹெக்டேர் பரப்பளவில் 1356 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. கடந்த 60 ஆண்டுகளாக இந்தக் குடியிருப்பு பயன்பாட்டிலிருந்து வருகிறது. அதனால், சிதிலமடைந்த நிலையிலிருந்தது. எனவே இங்கே வசித்து வருபவர்களை 20.01.2022 மற்றும் 09.03.2022 ஆகிய தேதிகளில் காலி செய்ய வாரியம் அறிவிப்பும் வெளியிட்டது. அதற்கான அறிவிப்பாணைகள் வழங்கப்பட்டன. பல முறை இதற்காக மீனவ சபையினருடன் பேச்சு வார்த்தை நடத்தினோம். ஆனால், ஒரு சுமுக தீர்வு எட்டப்படவில்லை. இதனால்தான் 134 ஆவது 3ஆவது தளத்தில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னல் சன்ஷேட் இடிந்து விழுந்ததில் சையத் குலாப் காயப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்" என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்தச் சம்பவம் பற்றி அங்கே உள்ள குடியிருப்பு வாசிகளிடம் விசாரித்தபோது, சம்பவம் நடைபெற்ற அன்று காலைதான் வேலையிலிருந்து சையத் குலாப் வீடு திரும்பியதாகவும் அப்போது அவர் அந்த பால்கனியின் கீழாக உட்கார்ந்ததாகவும் தெரிவிக்கின்றன. இந்த இளைஞர் உட்கார்ந்த சில நொடிகளிலேயே பால்கனி இடிந்து விழுந்துள்ளது. அதன் அனைத்து கற்களும் அவரது தலையிலேயே விழுந்துள்ளன. இதனால் கடுமையான காயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

அடிப்பட்ட அவரை பேச்சுமூச்சு இல்லாத நிலையில்தான் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளன. ஆனால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. உயிரிழந்த சைத் குலாப்க்கு இன்னும் 4 மாதங்களில் திருமணம் நடக்க இருந்தது. அதற்குள் அவரது உயிரை அந்த சன்ஷேட் பறித்துவிட்டது. அவரது வீட்டின் அருகே வசிக்கும் உறவினர்கள் பலரும் 'அரசு 5 லட்சம் நிவாரணம் அளித்துள்ளது. அந்த இளைஞரின் உயிரை அதை வைத்து மீட்டுத் தர முடியுமா? நாளை எங்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது. தினம் தினம் செய்து பிழைக்கிறோம். எங்களுக்கு மாற்று வீடு கொடுங்கள். இல்லை என்றால் நஷ்ட ஈடு கொடுங்கள். நாங்கள் உயிருடன் வேறு இடத்திற்குப் போய்விடுகிறோம்' என்கிறார்கள்.
இந்த அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக பலமுறை இப்படி பல வீட்டு பால்கனிகள் இடிந்து விழுந்துள்ளன. கடந்த ஒருவாரம் முன்பாக இரண்டு வீடுகளில் சன்ஷேட் விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக அருகில் யாரும் இல்லை. இந்தக் குடியிருப்பு முழுக்கவே கான்கிரீட் கம்பிகள் தெரியும் படி உள்ளன. வீட்டின் மேற்கூரைகள் பாதி இடிந்து போய் தொங்குகின்றன. வீடுகள் முழுக்க பக்கவாட்டு சுவர், படிக்கட்டுகள், சீலிங் என அனைத்து இடங்களில் உடைசல்கள் பயத்தைத் தரும் அளவுக்கு இருக்கின்றன. எப்படி இங்கே வசிக்கிறார்கள் என்பதே பீதியாக இருக்கிறது.

இப்போது இறந்து போன இளைஞரின் உறவினர் ஒருவரின் பிள்ளையும் இதேபோல் கட்டடம் இடிந்து விழுந்துதான் உயிரிழந்துள்ளார். சிலருக்குப் பல முறை காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. அதற்குப் பின்னர் இப்போதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இங்கே இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் குடியிருக்கிறார்கள். அனைவரும் கடந்த 52 ஆண்டுகள் மேலாக இங்கேதான் பிறந்து வளர்ந்துள்ளனர். இந்தக் கட்டடத்தை மறுசீரமைப்பு என சிமெண்ட் பூசி வேலைகள் பலமுறை நடந்துள்ளன. ஆனால் அவை தரமற்ற வேலைகள் என மக்கள் புகார் அளிக்கின்றன. 50 ஆண்டுகளைக் கடந்த கட்டடம் என்பதால் இதை இடித்து புதியதாக கட்டித் தருவதே நல்ல தீர்வை வழங்கும் என்றும் அவர்கள் சொல்கின்றன. அமைச்சர் மக்கள் குடியிருப்பை காலி செய்ய மறுக்கிறார்கள் என அறிக்கை வெளியிடுகிறார். ஆனால், இங்கு வசிக்கும் மக்களோ எந்த நேரம் அரசு மாற்று இடம் கொடுத்தால் உடனடியாக வெளியேறத் தயார் என்கிறார்கள்.
நம்மிடம் பேசிய இஸ்லாமியப் பெண்மணி ஒருவர் கடந்த 7 ஆண்டுகளாக வீட்டை மாற்றிக் கொடுக்க கூறி கோரிக்கை விடுத்து வருவதாகச் சொல்கிறார். இங்கே உள்ள மசூதி மூலம் கோரிக்கை மனு எழுதிக் கொடுத்தும் ஒரு பயனும் இல்லை எனக் கண்கலங்குகிறார். இந்தக் கட்டடம் மட்டும் மோசமாக இல்லை. இங்கே சுற்றுப்புற சுகாதாரமும் மிக மோசமாக உள்ளது. மழைக்காலங்களில் கட்டடங்கள் உள்ளே நீர் அருவிபோல் கொட்டுகிறது. அதைக் கடந்த ஆண்டே தான் அதிகாரிகளிடம் தெரிவித்தேன் என்கிறார் ஒருவர்.
இளைஞர் குலாப் மரணத்தை ஒட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவரது மாமா வீட்டு மாடியிலிருந்து குதிக்க முயற்சி செய்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திக் காப்பாற்றியுள்ளனர். சொல்லப் போனால் இந்தக் குடியிருப்பு வாசிகள் அனைவருமே வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு, தினம் தினம் செத்துப் பிழைத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Related Post