சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் பிரேம்குமார் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் கணவனை பிரிந்து வாழும் பெண் ஆவார். அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆர்வமுடன் இருந்தார். ஆனால் அந்த காதலி வேறொருவரை திருமணம் செய்யப் போவதாக கூறியதால் 'வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ்’ வைத்துவிட்டு இளைஞர் எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த 24 வயதாகும் பிரேம்குமார் என்பவர், சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறி, இருவரும் 6 மாதமாக காதலித்து வந்ததார்களாம். அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் விவாகரத்து ஆக ப்போவதாகவும், அதன்பிறகு நாம் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் பிரேம்குமாரிடம் அந்த பெண் கூறியிருந்தாராம்.
இந்த நிலையில் அந்த பெண், வேறொரு இளைஞருடன் ஒன்றாக இருப்பதை தனது 'வாட்ஸ்அப் ஸ்டேட்டசில்’ வைத்து இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரேம்குமார், அந்த பெண்ணிடம் அந்த இளைஞர் யார்? என கேட்டார். அதற்கு இளம்பெண், நான், அவரைதான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என கூறியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு பிரேம்குமாரின் செல்போன் அழைப்பையும் அந்த பெண் எடுக்காமல் துண்டித்து வந்தார்.
இதனால் விரக்தி அடைந்த பிரேம்குமார், நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு வீட்டின் அறையில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். முன்னதாக 'வாட்ஸ் அப் ஸ்டேட்டசில்’ தனது தற்கொலைக்கு காரணம் அந்த பெண் தான் என அவரது செல்போன் எண்ணை பதிவு செய்து வைத்திருந்தார். இது குறித்து சென்னை ஆர்.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
Weather Data Source: Wettervorhersage 21 tage