சென்னை: ஆதிதிராவிட தொழில் முனைவோர் 1,303 பேருக்கு ரூ.160 கோடி மானியம் வழங்கப்பட்டிருக்கிறது என்று தமழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் இந்த திட்டத்தில் மானியம் பெறுவது எப்படி என்பது குறித்து இந்த செய்தி விளக்குகிறது.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்: பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் விவசாயம், அரசு வேலை, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தல் என்ற அளவிலேயே இருப்பதை மாற்றி தொழில்முனைவோர்களாக உருவாகவும், பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கவும், அச்சமுதாய மக்கள் ஒருங்கிணைந்து முன்னேற்ற பாதையில் செல்லவும் இந்திய அளவில் முதன்மையான திட்டமாக தமிழ்நாடு அரசால் கடந்த 2023-24 நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS) துவங்கப்பட்டது.
மானியம்: இந்த திட்டத்தின் மூலம், நீங்கள் ஆதிதிராவிடராக இருந்து, ஒரு தொழிலை தொடங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கு மானியம் வழங்கப்படும். உங்கள் தொழில் திட்டத்தின் தொகையில் 35 % மூலதன மானியம் வழங்கப்படும். இதற்கான உச்சவரம்பு ரூ.1.5 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தொழில் தொடங்குவோருக்கு கல்வி தகுதி என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் வயது வரம்பு 55 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. புதிய நிறுவனங்கள் மற்றும் இயங்கும் நிறுவனங்களின் விரிவாக்க முனைப்புகளுக்கு உதவி கோரலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்: பள்ளி அல்லது கல்லூரி மாற்றுச் சான்றிதழ்களின் நகல்கள் -2, குடும்ப அட்டையின் நகல்கள் - 2, குடும்ப அட்டை இல்லாதவர்கள் தாசில்தாரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையின் நகல்கள் - 2, தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை அசல் மற்றும் நகல், விலைப்பட்டியல் அசல் மற்றும் நகல், விலை பட்டியலை பொறுத்தவரை GST எண்ணுடன் உள்ள விலைப்பட்டியல் இருக்க வேண்டும். சாதிச் சான்றிதழ் நகல்கள் - 2, நோட்டரி பப்ளிக்கிடம் கையெழுத்து வாங்கிய உறுதிமொழிப் பத்திரம் ஆகியவை தேவை
விண்ணப்பிக்கும் முறை: மானியம் கோரி விண்ணப்பிப்பவர்கள், ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://msmeonline.tn.gov.in/aabcs/ என்கிற ஆன்லைன் தளத்திற்கு சென்று, புதிய கணக்கை தொடங்க வேண்டும். பின்னர் ஆவணங்களை பதிவேற்றுவதற்கான ஆப்ஷன் கேட்கும். இதில் ஒவ்வொரு ஆவணங்களாக பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும்.
இதர விதிமுறைகள்: திட்டத்தொகை நிலம், கட்டடம், இயந்திர தளவாடங்கள் மற்றும் கருவிகள், ஆய்வு மற்றும் மதிப்பீட்டுக் கருவிகள், கணினி ஆகியவற்றின் விலை மதிப்பை உள்ளடக்கியது. நிலமதிப்பு மொத்த திட்டத் தொகையில் 20% ஐ மிகலாகாது. கட்டிட மதிப்பு மொத்த திட்டத்தொகையில் 25 %க்குள் இருக்க வேண்டும். ஒரு செயல்பாட்டுச் சுழற்சிக்குத் (One Operating cycle) தேவைப்படும் நடைமுறை மூலதனமும், மொத்த இயந்திர தளவாடங்கள் / கருவிகள் மதிப்பில் 25% என்ற வரம்புக்குட்பட்டு திட்டத் தொகையாகக் கணக்கில் கொள்ளப்படும். திட்டச் செயல்பாடுகளுடன் ஒருங்கிணைந்த பகுதியாக அமையும் வாகனங்களின் மதிப்பும் கணக்கில் கொள்ளப்படும்.
இயந்திர தளவாடங்கள் / கருவிகள் வாங்கப் பெறப்பட்ட பருவக் கடனுக்கு, கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் முழுதும் (அதிகபட்சம் 10 ஆண்டுகள்) 6% வட்டி மானியம். வட்டி மானியம் முன்கூட்டியே வங்கிகளுக்கு பட்டுவாடா செய்யப்படும்.
நடைமுறை மூலதனத்துக்காகப் பெறப்பட்ட கடனுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை வட்டி மானியம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்கள் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத பிற அரசு / அரசல்லாத நிறுவனங்களில் மானியம் பெறத் தடையில்லை.
பட்டியல் வகுப்பு / பட்டியல் பழங்குடி இனத் தனிநபர்கள், முழுமையாகப் பட்டியல் வகுப்பு / பட்டியல் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களால் உடைமை கொண்ட நிறுவனங்கள் மட்டுமே பயன்பெற இயலும்.