தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளிலும் ஏஐ பாடத்திட்டம்! பூரித்த அன்பில் மகேஷ்

post-img
சூலூர்: அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பாடத்திட்டத்தை கொண்டு வர போவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், சூலூர், புாப்பம்பட்டி பிரிவு, கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியில் நேற்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான மாநில அளவிலான இரண்டு நாள் பணி ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் மதுமதி, தமிழ்நாடு மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலாளர் சுதன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில் அரசுப் பள்ளிகளில் ஏஐ பாடத்திட்டத்தைக் கொண்டு வர எஸ்சிஇஆர்டி மூலம் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த கூட்டத்தில் அதற்கான ஆலோசனையைத்தான் மேற்கொண்டோம். அடுத்த ஆண்டு எப்படியாவது ஏஐ பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அமெரிக்காவில் ஒரு தொழில்நுட்பம் வந்தால் அது அடுத்த நாளே தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். அதற்காகவே பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தியாவிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

Related Post