நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறித்து பார்க்கலாம்.
தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்து காணப்பட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதும் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சமவெளி பகுதிகளில் விளையக்கூடிய காய்கறிகள் தவிர்த்து நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய மலை காய்கறிகள் விலையும் அதிகரித்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளபடுகிறது. அதற்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் விவசாயம் பெரும்பாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை அதிக அளவில் கொட்டி தீர்த்தது. இதனால் மலை காய்கறிகள் விலையும் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், மலை காய்கறிகளை பயிரிட்ட விவசாயிகளுக்கு கனிசமான லாபம் கிடைத்து வந்தாலும், உள்ளூர் பொதுமக்கள் விலை உயர்வால் சற்று சிரமத்திற்கே ஆளாகி வருகின்றனர். விலை உயர்வால் உதகையில் உள்ள பிரதான மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. கடை வைத்திருக்கும் சில்லறை வியாபாரிகளும் இதனால் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
உதகை மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை நிலவரத்தை பொறுத்தவகையில், தக்காளி 1 கிலோ 120 முதல் 130 வரையிலும், பெரிய வெங்காயம் 1 கிலோ 30 ரூபாக்கும், சி.வெங்காயம் 100க்கும், கேரட் 1 கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் 1 கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.