சென்னை: இறைத் தூதரே வந்து திமுகவுக்கு ஓட்டு போடாதீங்கன்னு சொன்னாலும்.. நீங்கள் இறைத் தூதரே இல்லைனு சொல்வாங்களே ஒழிய இஸ்லாமிய மக்கள் எங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது கடும் சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் சீமானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இந்திய தேசிய லீக் கட்சியின் தடா ஜெ.அப்துல் ரஹீம்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நேற்று திருச்சி சென்றிருந்தார். அப்போது இசுலாமியர்கள் குறித்த அவரது பேச்சு தமிழக அரசியலில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இஸ்லாமியர்கள் குறித்த சீமானின் விமர்சனம் கடுமையாக எதிர்ப்பை பெற்றுள்ள நிலையில், இஸ்லாமியர்களும், பிற அரசியல் கட்சி தலைவர்களும் சீமானுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அப்படி என்னதான் பேசினார் சீமான்?. "இஸ்லாமிய மக்கள் எனக்கு எப்போதுமே ஓட்டு போட்டதில்லை. இதை என் தலைவர் மீது ஆணையிட்டு சொல்கிறேன். இனியும் போடுவார்களா என்பது அவர்களுக்குத்தான் தெரியும். அவர்களின் 5 கடமைகளில் 6ஆவது கடமையாக திமுகவுக்கு ஓட்டு போடுவது என வைத்துள்ளார்கள். இறைத் தூதரே வந்து திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்றால் கூட நீங்கள் இறைத் தூதரே இல்லைனு சொல்வார்களே ஒழிய திமுகவுக்கு ஓட்டு போடாமல் இருக்க மாட்டார்கள். கேட்டால் நான் பாஜகவின் பி டீமாம். திமுக பாஜகவின் ஏ டீம் என்பதால்தான் என்னை பி டீம் என்கிறார்கள்." என பேசியிருந்தார்.
தற்போது மட்டுமல்ல ஏற்கனவே பல நேரங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதாக சீமான் மீது புகார் எழுந்திருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாம் அரேபிய மதம், கிறிஸ்தவர்கள் ஐரோப்பிய மதம் தாய் மதத்துக்கு திரும்பி வாருங்கள் என சீமான் பேசியது பாஜகவின் குரலாக இருப்பதாக புகார் எழுந்தது.
மேலும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய சீமான், "இஸ்லாமும் கிறிஸ்தவமும் தேவன் குழந்தைகள் என நாம் நினைக்கிறோம்.. ஆனால் அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது" என பேசி இருந்தார். இப்படி சீமானின் பேச்சு ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகளின் குரலை பிரதிபலிப்பதாக புகார் எழுந்து வரும் நிலையில் திருச்சியில் சீமானின் பேச்சு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சீமானுக்கு எதிராக கடும் கண்டனங்களை பலரும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு முதன் முறையாக இஸ்லாமிய கட்சியின் தலைவர் ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல இந்திய தேசிய லீக் கட்சியின் நிறுவனர் தலைவரான தடா ஜெ.அப்துல் ரஹீம் தான்.
இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"திமுக முஸ்லிம் அடிமைகளுக்கு எதற்காக கோபம் வருகிறது? இஸ்லாமிய ஐந்து கடைமைகளில் ஆறாவது கடமை திமுகவை ஆதரிப்பது என்று முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன் அவர்கள் கூறும் போது வராத கோபம் இப்போ ஏன் வருகிறது. நபிகள் நாயகம் ஸல் அவர்களே உயிர் பெற்று வந்து திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க என்று கூறினாலும் நீங்க நபிகள் நாயகமே இல்லை என்று கூறி திமுகவுக்கு ஆதரிக்கிற கூட்டம் தான் இன்றைய முஸ்லீம்கள். இதை தான் எடுத்துக் காட்டாக கூறி உள்ளார் அண்ணன் சீமான் அவர்கள்." என கூறியுள்ளார்.