அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு பறந்த வார்னிங்.. போக்குவரத்து துறை சூப்பர் உத்தரவு! மக்களுக்கு நிம்மதி

post-img
சென்னை: அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை முக்கிய அறிவுரையை வழங்கியிருக்கிறது.. அத்துடன் இதுதொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டு, எச்சரிக்கை விடுத்துள்ளது. என்ன நடந்தது? பாதுகாப்பான பயணங்களை பொதுமக்கள் எப்போதுமே மேற்கொள்ள வேண்டும் என்பதில், நம்முடைய தமிழக போக்குவரத்து துறை அதிக கவனம் செலுத்தி வருகிறது.. இதையொட்டியே, பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும், போக்குவரத்து துறை அவ்வப்போது அறிவுரைகளையும் வழங்கி வருகிறது.. சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சமீபத்தில்கூட அறிவினை ஒன்றினை வழங்கியிருந்தார்.. பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும், மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும், அரசு பேருந்துகளில் பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகளை சுற்றறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். அதேபோல, மாற்றத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் பொழுதும் இறங்கும் பொழுதும் தேவைப்பட்டால் மனிதாபிமான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் கண்ணியத்துடன் நடத்த வேண்டும், அவமதிக்கக் கூடாது, மாற்றுத்திறனாளிகள் அமரும் இருக்கைகளுக்கு மேல் உள்ள ஸ்டிக்கர்கள் சரியான முறையில் ஒட்டப்பட்டு, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய எளிதாக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் தேவை நேரும் போது அமர்ந்து பயணிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழலில், அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி அரசு பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஒன்றை, டிரைவர் ஒருவர் ஒரு கையில் செல்போனில் பேசியபடியும், மறு கையில் பஸ்சை ஓட்டியும் சென்றிருக்கிறார்.. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் நேற்றைய தினம் வெளியாகி, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்திருந்தது. போக்குவரத்து துறையின் பார்வைக்கும் இந்த வீடியோ சென்றதையடுத்து, இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில், ஒரு கையில் செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டிச் சென்றவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பணி மனையை சேர்ந்த டிரைவர் கனகராஜ் என்பது தெரியவந்தது.. அவர், தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் சென்றபோது செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டியதும் உறுதியானது.. இதனையடுத்து கனகராஜை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை இதுதொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது... அதில், அரசு பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.. செல்போனை பயன்படுத்திக்கொண்டு ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கும் வீடியோ வெளிவருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

Related Post