மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.. துப்பாக்கிச்சூடு..

post-img

இம்பால்: மணிப்பூரில் பதற்றமான இரு மாவட்டங்களுக்கு இடையே பாதுகாப்புப் படையினரால் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி, போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். இதனால் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி, ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர்
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி - மெய்தி ஆகிய இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, பின்னர் பெரும் வன்முறையாக மாறியது. மே மாதம் 3ஆம் தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் பரவத் தொடங்கிய வன்முறை மாதக்கணக்கில் நீடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பிரதமர் மோடி நாளுமன்ற மக்களவையிலும், சுதந்திர தின விழா உரையின்போதும் மணிப்பூர் கலவரம் குறித்து பேசினார். அங்கு தற்போது அமைதி நிலவி வருவதாக தெரிவித்தார். அம்மாநில முதல்வரும் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதற்கிடையே பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மெய்தி மக்கள் குழுக்களின் அமைப்பான ஒருங்கிணைப்புக் குழுவின் COCOMI மீண்டும், தங்கள் வசிப்பிடங்களைச் செல்ல மெய்தி மக்களுக்கு அழைப்பு விடுத்தது.
இந்த நிலையில், நேற்று மாலையில் இருந்து தடுப்பு நடவடிக்கையாக பிஷ்ணூபுர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், ஊரடங்கு தளர்வு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், பிஷ்ணூபூர் மாவட்டத்தில் உள்ள ஓனாமில் இருந்து சுரசந்த்பூர் வரை இன்று நூற்றுக்கணக்கானோர் பேரணியாகச் செல்ல முயன்றனர். பேரணி நடத்தக்கூடாது என அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி பேரணியாகச் சென்றனர்.
அவர்கள் தோர்பங் பகுதியில் உள்ள தங்களுடைய வீடுகளுக்கு செல்ல முயன்றனர். இந்த பகுதியில் இருந்தே, கலவரம் ஏற்பட்டதும் பாதுகாப்புக்காக வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தடுப்புக்காக ராணுவத்தின் தடுப்பான்கள் வைக்கப்பட்டு இருந்த நிலையில் அவற்றை உடைத்து, முன்னேறிச் செல்ல போராட்டக்காரர்கள் முற்பட்டனர்.
அமைதி திரும்பிட்டு இருந்ததே! மணிப்பூரில் மீண்டும் வன்முறை.. இருதரப்பு இடையே மோதல்..3 பேர் உயிரிழப்பு
இதையடுத்து அவர்களை கட்டுப்படுத்த அதிரடி விரைவு படை, அசாம் ரைபிள் படை மற்றும் மணிப்பூர் போலீசார் அதிரடியாக குவிக்கப்பட்டனர். ஊரடங்கை மீறிச் சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் புல்லட்டுகளை கொண்டு துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.
மணிப்பூரின் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள ஃபூகாக்சாவ் இகாயில் பாதுகாப்புத் தடைகளை மீறிச் செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் பல சுற்று கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் 25க்கும் மேற்பட்டோர், குறிப்பாக அதிகமான பெண்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, ரப்பர் குண்டு துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. காயமடைந்த பலர் சிகிச்சைக்காக பிஷ்ணுபூர் மாவட்ட மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள பிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதால் பதற்றம் தொற்றியுள்ளது.

Related Post