திருப்பூர்: தனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமை தொகையான 1000 ரூபாயை, அபராதமாக தனியார் வங்கியே எடுத்துக் கொண்டுவிட்டதாக திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின்படி 1.06 கோடி மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் மகளிர் உரிமை தொகையை மினிமம் பேலன்ஸ் இல்லை என்று வங்கிகள் பிடித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்தது.
வங்கிகள் மகளிர் உரிமை தொகையை மினிமம் பேலன்ஸ் இல்லை என்று பிடிக்கக்கூடாது என்று ஏற்கனவே அரசு அறிவிறுத்தியிருந்தது. அதையும் மீறி வங்கிகள் அபராதத்திற்காக மகளிர் உரிமை தொகையை பிடித்துக்கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அப்படித்தான் திருப்பூரிலும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பூர் வஞ்சிபாளையம் முருகம்பாளையம் அருகே எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் மனோகரன் என்பவர் தனியார் பள்ளியில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி வசந்தி (57). தம்பதியருக்கு இரு மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமான நிலையில் வசந்தி கூலி வேலைக்கு சென்றுவந்தார். தமிழ்நாடு அரசு அறிவித்த மகளிர் உரிமைத்தொகைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணப்பித்திருந்தார்.
கடந்த செப்டம்பர் 14-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பணம் இவரது வங்கிக் கணக்குக்கு வந்தது. இதையடுத்து, பணம் எடுக்க வங்கிக்குச் சென்றுள்ளார். அப்போது இவரது கணக்கில் ரூ.36.46 மட்டும் இருந்திருக்கிறது.
இதை பார்த்த வசந்தி அதிர்ச்சி அடைந்து பணபரிவர்த்தனை தொடர்பாக ஸ்டேட்மெண்டை பாஸ்புக்கில் பிரிண்ட் அவுட் எடுத்து பார்த்தார் அதை பார்த்த போது அபராதமாக வங்கி கணக்கில் இருந்த பணம் பிடிக்கப்பட்டது தெரியவந்தது,
இது தொடர்பாக வசந்தி கூறுகையில், " எனக்கு கடந்த 14-ம் தேதி மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டது. ஆனால் 15-ம் தேதி பணத்தை 3 தவணைகளில் தலா ரூ.236-ஐ எடுத்திருக்கிறார்கள். இது தொடர்பாக எனக்கு ஒரு எஸ்எம்எஸ் கூட செல்போனுக்கு வரவில்லை. வங்கியில் கேட்டால், அபராதத் தொகை என அனுப்பி வைத்துவிட்டதாக தெரிவித்தனர்,
தமிழ்நாடு அரசு அபராதத்திற்கு பிடிக்கக்கூடாது என்று சொல்லியதை நான் சொல்லி கேட்டேன்.அதற்கு அவர்கள், இது தனியார் வங்கி என தெரிவித்தனர். இதனால் மகளிர் உரிமைத் தொகை பயனாளியாக இருந்தும், என்னால் அந்த திட்டத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை" என்று வதந்தி வேதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் ரவி கூறும்போது, "பாதிக்கப்பட்டவரின் புகாரை பெற்று, பரிந்துரைக்குமாறு கடிதம் சம்பந்தப்பட்ட தனியார் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது" என்றார்.