பாஜகவுடன் டீல் பேசுது..இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை துரத்திவிடுங்க...கதறும் ஆம் ஆத்மி

post-img
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைக்க காங்கிரஸ் திரைமறைவில் உடன்பாடு செய்துள்ளது; பாஜகவுடன் கை கோர்த்துள்ள காங்கிரஸ் கட்சியை இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி உள்ளது. டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகியவை தனித்தே போட்டியிடுகின்றன. டெல்லியின் 70 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆம் ஆத்மி ஏற்கனவே அறிவித்துவிட்டது. காங்கிரஸும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. பாஜகவும் டெல்லி யூனியன் பிரதேச தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் களமிறங்கி இருக்கிறது. டெல்லியில் முதலில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் இணைந்து 'இந்தியா' கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து இரு கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. இந்த நிலையில் டெல்லி முதல்வர் அதிஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஏன் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கிறது? நாங்கள் தேசத்துக்கு எதிரானவர்கள் எனில் எதற்காக எங்களுடன் கூட்டணி வைக்க வேண்டும்? எதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலை உங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய அழைத்தீர்கள்? டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக உதவுகின்றனர். பாஜகவுடன் திரைமறைவில் ஒப்பந்தங்களை செய்து கொண்டிருக்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். டெல்லி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பாஜகதான் நிதி உதவி செய்கிறது. அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் பாஜக நிதி உதவி அளிக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் சந்தீப் தீக்‌ஷித், சிசோடியாவை எதிர்த்து போட்டியிடும் பர்ஹாத் சுரி ஆகியோருக்கு பெருமளவு நிதி உதவி செய்துள்ளது பாஜக. டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கூட காங்கிரஸ் ஏன் முன்வைக்கவே இல்லை? இன்று அரவிந்த் கெஜ்ரிவாலை தேசவிரோத சக்தி என விமர்சிக்கிறது காங்கிரஸ்தான்.. அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்ததும் காங்கிரஸ்தான். ஆகையால்தான் இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை இதர கட்சிகள் இணைந்து வெளியேற்ற வேண்டும். இவ்வாறு அதிஷி கூறினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post