கோவை: சமுதாயத்தில் ஏற்படக்கூடிய அவலங்களுக்கு எதிராக இப்படி தான் சாட்டையில் அடித்து கொண்டதாகவும், முருகப்பெருமானிடம் வேண்டி 6 சாட்டை அடிகளையும் சமர்ப்பிக்க உள்ளதாகவும், திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும்வரை காலணி அணியமாட்டேன் என்றும் தமிழக பாஜக அண்ணாமலை மீண்டும் ஒருமுறை உறுதிபட தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "நாளையில் இருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் வெளியே இருந்தும் ஆர்ப்பாட்டம் நடக்கும். நாளை எனக்கு நானே சாட்டையடி கொடுக்கக் கூடிய நிகழ்வை காலை 10 மணிக்கு எனது வீட்டுக்கு வெளியே நடத்தப் போகிறேன்.
காலை பாஜக மாநிலத் தலைவரான எனது இல்லத்துக்கு வெளியே நின்று, சாட்டையால் என்னை நான் 6 முறை அடித்துக் கொள்ளப் போகிறேன். நாளையில் இருந்து திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை, நான் செருப்பு அணியமாட்டேன்.
செருப்பு: நாளையில் இருந்து 48 நாட்கள் நான் விரதம் இருக்கப்போகிறேன். பிப்ரவரி இரண்டாவது வார முடிவில், ஆறுபடை வீட்டுக்கும் நான் போகப்போகிறேன். முருகப்பெருமானிடம் முறையிடப் போகிறேன்" என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, இன்று காலை 10 மணியளவில், தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டார் அண்ணாமலை.. திமுக அரசை கண்டித்து, கோவையில் உள்ள தன்னுடைய இல்லத்தின் முன்பு, தனக்குதானே சாட்டையால் அடித்து கொண்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. பச்சை வேட்டி அணிந்து, சட்டை இல்லாமல், தேங்காய் நாறால் செய்யப்பட்ட சாட்டையால், 8 முறை தன்னை தானே அடித்து கொண்டார்.
சாட்டையடி: நேற்றைய தினம் சொன்னதைப் போலவே தன் வீட்டின் முன்பு சாட்டையால் தன்னைத்தானே அடித்து கொண்டார். 9வது முறை சாட்டையால் அடித்து கொள்ள போகும்போது, அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "முன்னாள் பிரதமரும், முக்கிய பொருளாதார கொள்கையை கொண்டு வந்தவருமான மன்மோகன் சிங்கிற்கு ஆழ்ந்த இரங்கலை பாஜக சார்பில் தெரிவித்து கொள்கிறோம். வருகிற நாட்களில் அவர் நாட்டுக்கு வகுத்து தந்த பொருளாதார கொள்கைக்காக அவரை எப்போதுமே நாம் நினைவுகூர்வோம். அவரது மரணத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் திட்டமிட்டிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
குற்றச்செயல்கள்: இன்று முன்னெடுத்துள்ள இந்த போராட்டம், வருகின்ற நாட்களில் இன்னும் தீவிரமாகும்.. கண்முன்னேயே அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.. போரில்கூட பெண்களின் மீது கை வைக்கக்கூடாது என்பது மரபாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே வருகிறது
முருகப்பெருமானிடம் வேண்டி 6 சாட்டை அடிகளையும் சமர்ப்பிக்க உள்ளோம். இன்றிலிருந்து விரதமும் மேற்கொள்ள போகிறோம். காலணியை நேற்றே கழட்டி வைத்துவிட்டேன்...
செருப்பு அணிய மாட்டேன்: திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும்வரை காலணி அணியமாட்டேன். உடலை வருத்திக் ஒன்றை செய்யும்போது, அதற்கான பலன் கிடைக்கும் என்பதால்தான், இந்த சாட்டையடி போராட்டம் நடத்தப்பட்டது. சமுதாயத்தில் ஏற்படக்கூடிய அவரங்களுக்கு எதிராக இப்படி நான் சாட்டையில் அடித்து கொண்டேன். நாங்கள் அறவழியில் செல்கிறோம். இது தனி மனித வெறுப்புக்காக இல்லை. ஆண்டவருக்காக சமர்ப்பித்துள்ளோம்.
நான் நேர்மையாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். 2026 தேர்தலில் தோற்றாலும் கவலைப்பட மாட்டேன். மக்களின் மீது நம்பிக்கை வைத்து அரசியல் செய்கிறோம். சேகர் பாபு போல முதல்வரின் காரில் தொற்றி செல்வது மட்டுமே அரசியல் இல்லை. இதை நகைச்சுவையாக பார்ப்பவர்கள் பார்த்து கொள்ளட்டும். எல்லா பதவியும் வெங்காயம் போல உரிக்க உரிக்க ஒன்றுமில்லை. தனிமனித வாழ்க்கை தான் முக்கியம்.
வாய்ப்பே இல்லை: காவல்துறையின் நடவடிக்கையில், அந்த பெண்ணின் குடும்பங்கள் திருப்தி தெரிவித்துள்ளதாக சென்னை கமிஷனர் கூறியிருக்கிறார்.. ஒரு காவல்துறை அதிகாரியாக இப்படி அவர் பேசலாமா? இந்த குற்றச்செயல்கள் தடுப்பதற்கு முன்பே தடுக்கப்பட்டிருந்தால், மகிழ்ச்சி அடைந்திருப்பார்களே? காவல்துறையை எல்லா நேரத்திலும் குறை சொல்ல மாட்டேன்.. ஆனால், முன்னாள் போலீஸ் அதிகாரி என்ற முறையில், அப்படி எஃஐஆர் லீக் ஆவதற்கு வாய்ப்பே இல்லை. காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதில்லை" என்றார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.