மாணவர்களுக்கு 'கணித' பயம் வருவது ஏன்? கற்றல் குறைபாட்டின் அறிகுறியா?

post-img
இன்று தேசிய கணித தினம் (டிசம்பர் 22). 'கணிதம்'- பள்ளி முதல் கல்லூரி வரை, இந்த ஒரு பாடத்தின் தேர்வுக்கும் அதன் மதிப்பெண்களுக்கும் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே ஒரு தனித்துவமான கவனம் கொடுக்கப்படுகிறது. அதுவும், பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியான பிறகு, மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு என்று கேட்டுவிட்டு, பலரும் கேட்கும் அடுத்த கேள்வி 'கணிதத்தில் எத்தனை மதிப்பெண்கள்?'. இன்னும் சொல்லப்போனால், பள்ளிக்கூடங்களில் ஒரு மாணவரின் கற்றல் திறனை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய அளவுகோலாக சிலரால் கணிதப் பாடம் பார்க்கப்படுகிறது. பள்ளியில் கற்பது மட்டுமின்றி, கணித பாடத்திற்கான 'டியூஷன்' வகுப்புகளுக்கும் செல்வது என்பது பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் கணிதம் என்றவுடன் அதை நினைத்து சில மாணவர்களுக்கு ஒரு பதற்றம் வரும், குறிப்பாக கணித தேர்வுக்கு முந்தைய நாள் முதல் தேர்வு அறைக்குள் நுழைவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை. ஆனால் இது ஒன்றும் அசாதாரணமான விஷயமல்ல என்றும் மாணவர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினரும் 'கணிதம்' தொடர்பான ஒரு பயத்தை அல்லது பதற்றத்தை தங்கள் வாழ்வில் உணர்கிறார்கள் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது. மாணவர்களுக்கு கணிதம் குறித்த இந்த பயம், நாளடைவில் கணித ஆசிரியர் மீதான பயமாக மாறுகிறது அல்லது கணித ஆசிரியர் மீதான பிம்பம், கணிதம் குறித்த பதற்றத்தை அதிகரிக்கிறது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. கணிதம் மீதான பயத்தைக் குறிக்கும் 'Math phobia' என்ற சொல் 1953-ஆம் ஆண்டு, அமெரிக்காவில், மேரி டி லெல்லிஸ் கோஃப் எனும் கணிதவியலாளரால் உருவாக்கப்பட்டது. கணிதப் பாடத்தில் தனது மாணவர்கள் பதற்றமடைவதைக் கவனித்த பின்னர், அவர் "கணித பயம் என்பது ஒரு நோய், அதன் இருப்பு கண்டறியப்படுவதற்கு முன்பே அது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்திவிடும்" என்று விவரித்தார். மற்ற வல்லுநர்கள் இதை "ஒரு கணித கேள்விக்கான விடை அளிக்க வேண்டியிருக்கும் போது சிலரிடையே எழும் பதற்றம், திக்கற்ற நிலை மற்றும் மன ஒழுங்கின்மை" மற்றும் "கணிதம் என்றவுடன் வரும் ஒரு பொதுவான பயம்" என்று வரையறுக்கின்றனர். 2018இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், அமெரிக்காவின் 18 வயதிற்கு மேற்பட்ட பிரிவினரில் (Adult population) ஏறக்குறைய 93% பேர் தங்களுக்கு கணிதம் குறித்த கவலை ஓரளவு இருப்பதாக தெரிவித்திருந்தார்கள். சர்வதேச மாணவர் மதிப்பீட்டிற்கான திட்டத்தின் அறிக்கையையும் (PISA) அந்த ஆய்வு மேற்கோள் காட்டுகிறது. அதன்படி 34 நாடுகளில் 15 மற்றும் 16 வயதுடையவர்களில் சுமார் 59% பேர் கணித வகுப்புகளை நினைத்து பயப்படுவதாகவும், 33% பேர் கணித வீட்டுப்பாடங்களை முடிக்க வேண்டியிருக்கும் போது மிகவும் பதற்றமடைவதாகவும் தெரிவித்தனர். மேலும் 31% பேர் கணித கேள்விக்கு விடை அளிக்கும்போது தாங்கள் மிகவும் பதற்றமடைவதாகவும் கூறினர். கணிதத்தின் மீது ஒருவித பயம் இருப்பதால், அதில் குறைவான மதிப்பெண்கள் எடுக்கிறோமா அல்லது கணிதத் திறன்கள் பலவீனமாக இருப்பதால், அது குறைவான மதிப்பெண்களுக்கோ அல்லது பதற்றத்திற்கோ வழிவகுக்கிறதா? என்ற கேள்வி இங்கு எழுகிறது. இரண்டு சாத்தியங்களும் உள்ளன என்றும், அது ஒரு சுழற்சியாக மாறிவிடுகிறது என்றும் அமெரிக்க மனநல சங்கத்தின் (American Psychiatric Association- ஏபிஏ) ஒரு ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. மாணவர்களிடையே, தொடக்கப் பள்ளி காலகட்டத்தில் இந்த 'கணித பயம்' தோன்றக்கூடும் என்றாலும், நடுநிலைப் பள்ளி அல்லது உயர்நிலைப் பள்ளி காலகட்டத்தில் இன்னும் சிக்கலான கணிதப் பாடங்களை அவர்கள் எதிர்கொள்வார்கள் எனும்போதும் தோன்றக்கூடும் என்றும் அந்த கட்டுரை கூறுகிறது. நல்ல கணிதத் திறன்களைக் கொண்ட மாணவர்களுக்கு கூட கணிதம் குறித்த பயம் இருக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஐந்தாம் வகுப்பு வரை கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். பிறகு எப்படி என்றே தெரியவில்லை, கணிதம் குறித்த ஒருவித பயம் தொற்றிக்கொண்டது. பத்தாம் வகுப்பில் கணித டியூஷன் வகுப்புகளே கதி என்று இருப்பேன். கல்லூரி வரை 'கணிதம்' என்பதே பெரும் போராட்டமாக இருந்தது. இன்று வரை அந்த பதற்றம் தொடர்கிறது. வீட்டு வரவு செலவு கணக்கை கூட என் கணவரிடமே முழுமையாக ஒப்படைத்துவிட்டேன்." என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சரண்யா. ஒரு தனியார் வானொலியின் தொகுப்பாளராக பணிபுரியும் இவர், "இப்போது என் மகனுக்கும் அந்த பயம் வருவதைப் பார்க்க முடிகிறது. டியூஷன் வகுப்புகளுக்கு அனுப்புவதால், தேர்ச்சி பெறத் தேவையான மதிப்பெண்கள் எடுக்கலாம், ஆனால் பயம் போகுமா என சொல்ல முடியவில்லை" என்கிறார். "கணிதம் குறித்த பயம் என்பது, சமூக அணுகுமுறைகள் மற்றும் கல்வி நடைமுறைகளில் வரலாற்று ரீதியாகவே காணப்படுகிறது" என்கிறார் ஓய்வு பெற்ற பேராசிரியர், அரசுக் கல்லூரி முதல்வர் சிவக்குமார். தொடர்ந்து பேசிய அவர், "பல கலாசாரங்களில், கணிதம் என்பது உள்ளார்ந்த திறமை தேவைப்படும் ஒரு பாடமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. சிலர் மட்டுமே அதில் சிறந்து விளங்க முடியும் என்ற பிம்பத்தை நிலைநிறுத்துகிறது." என்கிறார். கணிதம் குறித்த இத்தகைய பிம்பங்கள், கடுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் தேர்வுகள் ஆகியவை கணிதத்தின் மீதான பயத்திற்கு காரணம் என்றும் அவர் கூறுகிறார். அதேசமயம், மாணவர்களிடம் இருக்கும் இந்த பயத்தைப் போக்குவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறுகிறார் சிவக்குமார். கணித ஆசிரியர்களின் அணுகுமுறைகள் மற்றும் அவர்களின் கற்பித்தல் முறைகள், கணிதம் குறித்த மாணவர்களின் உணர்வுகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. 9 முதல் 11 வயது வரையிலான மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவினருக்கு பாரம்பரிய முறையில் கணிதம் கற்பிக்கப்பட்டது. அதாவது முதலில் கணித ஆசிரியர் ஒருமுறை மட்டும் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு, உடனடியாக அவர்களிடம் ஒரு கணிதச் கேள்வியை கொடுத்து, அதற்கு பிற மாணவர்களிடம் ஆலோசிக்காமல் தனியாக தீர்வு காண சொன்னார். இரண்டாவது, கூட்டு கற்றலை வலியுறுத்தும் மாற்று அணுகுமுறை. அதாவது ஒரு கணித கேள்விக்கு ஆசிரியர் சொல்லிக்கொடுத்த முறையில் மட்டுமல்லாது தங்களது உத்திகளைப் பயன்படுத்தியும் மாணவர்கள் விடை கண்டுபிடிக்கலாம், ஒரு குழுவாக கணித கேள்விகளை தீர்க்கலாம், சந்தேகங்கள் மற்றும் விடைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். இந்த ஆய்வில், இரண்டாவது கற்பித்தல் முறையில் மாணவர்களின் படைப்புத் திறன் அதிகரித்தது மட்டுமல்லாது, கணிதம் குறித்த அவர்களின் பயமும் குறைந்தது என்று கண்டறியப்பட்டது. "இங்கு மாணவர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க விரும்புகிறோமா, அல்லது வெறுமனே மதிப்பெண்களை மட்டும் அவர்கள் எடுத்தால் போதும் என விரும்புகிறோமா என்பதுதான் கேள்வி." என்று கூறுகிறார் ஓய்வு பெற்ற பேராசிரியர் சிவக்குமார். இதுகுறித்துப் பேசிய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி கணித ஆசிரியர் பிச்சைக் கனி, "சில தனியார் பள்ளிகளில் 'கணிதத்தில்' குறைவான மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களை பாதியில் அனுப்பி விடுவது கூட நடக்கிறது. அவ்வாறு வரக்கூடிய மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்வோம். அவர்களுக்கு ஏற்றார் போல சொல்லிக்கொடுப்பதில் கவனம் செலுத்துவோம்" என்கிறார். ஆனால், கணிதம் குறித்த பயம் அல்லது பதற்றம் கொண்ட எல்லா மாணவர்களுக்கும் ஆசிரியர்களின் தனிப்பட்ட கவனம் மட்டுமே பலனளித்து விடாது என்கிறார் உளவியலாளர் சாகித்யா ரகு. "சில பிள்ளைகளுக்கு 'கணித பயம்' என்பது கற்றல் குறைபாட்டின் அறிகுறியாக கூட இருக்கலாம். உதாரணமாக 'டிஸ்கால்குலியா' (Dyscalculia), எனும் கற்றல் குறைபாடு. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்களை அடையாளம் கண்டுக்கொள்வதிலும், எளிமையான கணித கேள்விக்கு விடை அளிப்பதற்கு கூட கஷ்டப்படுவார்கள்" என்கிறார். 'டிஸ்கால்குலியா' இருப்பவர்கள் அன்றாட வாழ்க்கையில், போன்ற எளிய விஷயங்களுக்கு கூட பதற்றமடைவார்கள் என்கிறார் உளவியலாளர் சாகித்யா. "இவர்கள் கணிதத்தை முடிந்தளவு தவிர்க்க முயற்சிப்பார்கள், முடியாதபட்சத்தில் முயற்சி செய்து மோசமான மதிப்பெண்கள் பெறும்போது, மன அழுத்தம் ஏற்படும். அதை சிறுவயதிலேயே கண்டறிந்து தேவையான சிகிச்சைகளை வழங்க வேண்டும்" என்கிறார். ஆனால் 'டிஸ்கால்குலியா' என்பது குறைவான அறிவாற்றல், கல்வியின்மை அல்லது மோசமான கற்பித்தல் முறை ஆகியவற்றின் விளைவாக வருவது இல்லை என்பதையும் சுட்டிக்காட்டும் சாகித்யா, "இது எதனால் ஏற்படுகிறது என்பது இன்னும் துல்லியமாக கண்டறியப்படவில்லை. மரபு வழியாக வருவது, நரம்பியல் சார்ந்தது என சில காரணிகளை விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்" என்கிறார். சிறு வயதில் முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இளமை பருவத்தில், ஒருவரின் ஆளுமை வளர்ச்சி, கல்வி, தொழில் பயிற்சி ஆகியவற்றில் 'டிஸ்கால்குலியா' பாதிப்பை ஏற்படுத்தும் என ஒரு ஆய்வு கூறுகிறது. பிற்காலத்தில் மோசமான கணித திறன்களைக் கொண்ட இளைஞர்கள், வேலைக்கான போட்டியில் பின்னடைவைச் சந்திக்கின்றனர் என்றும், இது பொருளாதார ரீதியாகவும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவர் பூர்ண சந்திரிகா, "ஒரு குழந்தைக்கு கற்றல் குறைபாடு இருக்கிறது என்பதை பார்த்தவுடன் எல்லாம் சொல்லிவிட முடியாது. அதற்கு என பிரத்யேக சோதனைகள் உள்ளன." என்கிறார். ஆனால் ஏதோ ஒரு பிரச்னை உள்ளது என்பதை முதலில் அடையாளம் கண்டுகொள்வது ஆசிரியர்கள்தான் என்று கூறும் பூர்ண சந்திரிகா, "சில பெற்றோர்கள் ஆசிரியர்கள் எடுத்துக்கூறினால் கேட்டுக் கொள்வார்கள். சிலரோ அவர்களிடம் 'எங்கள் பிள்ளையின் மன நலம் சரியில்லை என குறை சொல்கிறீர்களா' என சண்டைக்கு கூட செல்வார்கள்" என்கிறார். ஒவ்வொரு மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையிலும் உள்ள உளவியல் துறையின் மருத்துவர்களை அணுகினால் அவர்கள் நிச்சயம் வழிகாட்டுவார்கள் என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா. ஏடிஹெச்டி (ADHD), டிஸ்லெக்சியா (Dyslexia) போல டிஸ்கால்குலியா-வையும் சிறுவயதில் கண்டறிந்தால், குழந்தையின் வாழ்க்கையைப் பாதிக்காதவாறு நேர்மறையாக அதை மடைமாற்றலாம் என அவர் சுட்டிக்காட்டுகிறார். "கணித பயமோ அல்லது கற்றல் குறைபாடோ, ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதை புரிந்துகொண்டு, மதிப்பெண்கள்தான் முக்கியம் என்ற மனநிலையில் இருந்து விலகி, குழந்தைகளை அணுகுவதே தீர்விற்கான முதல் படி" என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post