சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 75,028 மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கிடும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி வைத்து, 63,000 சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை திறந்து வைக்கிறார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்," தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021ஆம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக மகளிர் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறார்.
பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயண வசதி தரும் விடியல் பயணத் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். அரசுப் பள்ளிகளில் உயர்கல்வியில் சேரும் மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கிடும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் எனும் புதுமைப் பெண் திட்டம் முதலான பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றி, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்று வருகிறார்.
இத்திட்டங்களுள் புதுமைப் பெண் திட்டம் 5.9.2022 அன்று வடசென்னை பாரதி மகளிர் கல்லூரில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இத்திட்டம், வறுமை காரணமாக உயர்கல்வியில் சேரஇயலாத மகளிர்க்கு உயர்கல்வி வாய்ப்பை தருவதோடு.
பெற்றோரின் பொருளாதாரச் சுமையை குறைக்கிறது. இளம் வயது திருமணங்களையும் தடுக்கிறது. மாணவியர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கிறது. இத்திட்டத்தின் பயனாக, மாணவியர்கள் அதிகளவில் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து. புதுமைப் பெண்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, திருவள்ளுவர் மாவட்டம், பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில் 8.2.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாநிலத் திட்டக்குழு நடத்திய ஆய்வில், கடந்த 5.9.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு நாளது வரையில், 4இலட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவியர்க்கும் பயன் தருகிறது புதுமைப் பெண் திட்டம். புதுமைப் பெண் திட்டம் அரசுப் பள்ளிகளில் படித்துள்ள மாணவியர்களுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவியர்க்கும் மாதம் 1,000 வழங்கும் வகையில் தற்போது விரிவுபடுத்தப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தூத்துக்குடியில் 30.12.2024 திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார்கள். இதன் பயனாக, தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75,028 மாணவியர் மாதம் 1,000 ரூபாய் பெற்றுப் பயனடைவார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கல்வி வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருவதுடன், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெருக்கும் வகையில் புதிய தொழில்களைத் தொடங்குவதற்காக இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் சென்று தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் புதிய தொழில்களுக்கான முதலீடுகளை ஈர்த்து வருகிறார்கள்.
இதுவரை ஏறத்தாழ 10 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் பயனாக, ஏறத்தாழ 31 இலட்சம் இளைஞர்கள் புதிய வேலை வாய்ப்புகள் பெறும் நிலை உருவாகியுள்ளது. மேலும், கடந்த 40 மாதங்களில் பல்வேறு புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியிலும் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். தகவல் தொழில் நுட்பத் தொழில்கள் தமிழ்நாட்டில் செழித்து வளர்ந்துள்ளன. தகவல் தொழில் நுட்பத்திற்கு புதிய கொள்கையை முதன்முதல் வகுத்த மாநிலம் தமிழ்நாடு.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தகவல் தொழில் நுட்பத் தொழில்களைப் பெருக்கும் நோக்கத்துடன் இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய டைடல் பூங்காவினை கடந்த 2000ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 4ஆம் நாள், அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களை அழைத்துத் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, உலகின் புகழ் வாய்ந்த முன்னணித் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்களைத் தொடங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக, கோவை. மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் தகவல் தொழில் நுட்பத் தொழில் வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டன. தகவல் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் படித்த இளைஞர்கள். இளநங்கையர் பல்லாயிரக் கணக்கில் வெளிநாடுகளிலும் தமிழ்நாட்டிலும் பெங்களூரூ. ஹைதராபாத் முதலிய இடங்களிலும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.
இந்தத் தகவல் தொழில் நுட்பத் தொழில்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் விழுப்புரம், திருப்பூர், வேலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, சேலம், காரைக்குடி ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்காக்களையும், மதுரை. திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்களையும் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றுள் விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்பப் பூங்கா, திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் தமிழ்நாடு அரசுக் கட்டடங்களில் மிக அளவில் 21 தளங்களுடன் கூடிய மாபெரும் டைடல் பூங்கா ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவற்றைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் 63,000 சதுர அடி பரப்பில் தரைத் தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா பூங்காவினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 29.12.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.50 மணிக்கு திறந்து வைக்கிறார்கள். இப்பூங்காவானது. வாகனம் நிறுத்துமிடம். பல்வகை உணவுக்கூடம். உடற்பயிற்சிக்கூடம். கலையரங்கம். தடையற்ற மின் வசதி ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ, 32 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடியதாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் குறிப்பாக தூத்துக்குடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா மேலும் ஒரு மைல் கல் திட்டமாக வடிவெடுத்துள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தூத்துக்குடி பயணம் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் தொடக்கம். மினி டைடல் பூங்கா திறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் வாயிலாக தூத்துக்குடி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்து வரவேற்பைப் பெற்றுள்ளது." என கூறப்பட்டுள்ளது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.