ரஷ்ய வான்பரப்பில் பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்டதில் 38 பேர் கொல்லப்பட்டதற்காக அண்டை நாடான அஜர்பைஜான் அதிபரிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ரஷ்யாதான் பொறுப்பா என்பது குறித்து அவர் ஏதும் கூறவில்லை.
கிறிஸ்துமஸ் தினத்தன்று நேரிட்ட விமான விபத்து குறித்த தனது முதல் கருத்தை அவர் வெளியிட்டார். ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் யுக்ரேனிய ட்ரோன் ஆபத்துகளை அகற்றுவதில் முனைப்பாக இருந்த போது இந்த "சோக சம்பவம்" நிகழ்ந்ததாக புதின் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் செச்னியாவில் தரையிறங்க முயன்ற போது ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளால் விமானம் சுடப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் அந்த விமானத்தை காஸ்பியன் கடல் வழியே திருப்பிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் செய்திகள் வெளியான நிலையில் புதின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவுடன் புதின் தொலைபேசியில் பேசியதாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் சனிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது.
"(அதிபர்) விளாடிமிர் புதின், ரஷ்ய வான்வெளியில் நடந்த சோகமான சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவர் வேண்டிக் கொண்டுள்ளார்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வரையிலும் கிரெம்ளின், விமான விபத்து குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், செச்னியா மீது யுக்ரேனிய ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதால், அப்பகுதியில் நிலைமை "மிகவும் சிக்கலாக இருந்தது" என்று ரஷ்ய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கூறியிருந்தனர்.
முன்னதாக, கஜகஸ்தானின் அக்டாவ் நகரில் 38 பேரில் உயிரை பலி வாங்கிய அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்துக்கு ரஷ்யா காரணமாக இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் தெரிவித்திருந்தது. அதற்கான ஆரம்பக் கட்ட தடயங்கள் கிடைத்துள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
கிர்பி இதுபற்றி கூடுதல் விவரங்களை வழங்கவில்லை. ஆனால் விபத்து தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா உதவும் என செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
கிர்பியை மேற்கோள் காட்டி, அதிகளவில் பகிரப்பட்ட விபத்துக்குள்ளான விமானத்தின் புகைப்படங்களை விட அதிகமான தடயங்களை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது என்று வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது.
விமானத்தின் ஜிபிஎஸ் சிஸ்டம் எலக்ட்ரானிக் ஜாமிங்கால் சேதமடைந்ததாக அஜர்பைஜான் நம்புவதாக விமானப் போக்குவரத்து நிபுணர்கள் கூறுகின்றனர். ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளின் தாக்குதலால் அது சேதமடைந்ததாக அவர்கள் கருதுகின்றனர்.
அஜர்பைஜான் ரஷ்யா மீது குற்றம்சாட்டவில்லை. ஆனால் அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ரஷாத் நபியேவ் கூறுகையில், விமானம் 'வெளிப்புற குறுக்கீட்டால்' பாதிக்கப்பட்டதாக கூறியிருந்தார்.
"விமானம் க்ரோஸ்னிக்கு மேலே பறந்த போது மூன்று வெடிப்புகள் கேட்டதாக கிட்டத்தட்ட அனைவரும் (உயிருடன் திரும்பியவர்கள்) சொன்னார்கள்" என்று ரஷாத் நபியேவ் கூறினார்.
"என்ன வகையான ஆயுதம் அல்லது ஏவுகணை பயன்படுத்தப்பட்டது" என்பதை புலனாய்வாளர்கள் ஆராய்வார்கள் என்றும் நபியேவ் கூறினார்.
அஜர்பைஜானில் ஆளும் அரசை ஆதரிக்கும் எம்.பி.யான ரஷிம் முசபெகோவ், "ரஷ்ய எல்லையில் உள்ள க்ரோஸ்னிக்கு மேலே பறந்த போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை மறுக்க இயலாது." என்று கூறினார்.
விமானப் பணிப்பெண் சுல்புகார் அசடோவ், செச்னியாவுக்கு மேலே விமானம் பறந்த போது "ஒருவித வெளிப்புற தாக்குதலால்" விமானம் தடுமாறியத் தருணங்களை விவரித்தார்.
"இது விமானத்தின் உள்ளே எங்களுக்கு பீதியை ஏற்படுத்தியது. நாங்கள் அனைவரையும் அமைதிப்படுத்த முயற்சித்தோம். நாங்கள் அவர்களை இருக்கையில் அமர வைத்தோம். பின்னர் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது, அதில் என் கையில் அடிபட்டது." என்றார்.
விபத்துக்குள்ளான எம்ப்ரேயர் - 190 ரக விமானத்தின் பைலட்டுகள் 29 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.