“உப்புமா கம்பெனியா?” காலை உணவுத் திட்டம் பற்றிய சீமான் பேச்சால் திமுகவினர் கொந்தளிப்பு!

post-img
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் பசியோடு இருக்கக்கூடாது என்பதற்காக தமிழக அரசு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், "வாரத்தில் 5 நாட்கள் உப்புமா போடுகிறார்கள், இது என்ன உப்புமா கம்பெனி திட்டமா?" என்று காட்டமாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, அரசு பள்ளி மாணவர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' செயல்படுத்தப்ப‌ட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப்பள்ளி மாணவ‍, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்களும், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்களும், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்களும், 237 தொலைதூர, மலைப் பிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்களும் என மொத்தம் 1,545 பள்ளிகளில் 1,14,095 மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த காலை உணவு வழங்கும் திட்டத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், "திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் கல்வி வளத்துக்காக என்ன செய்துள்ளன? ஒரே ஒரு திட்டத்தை சொல்லுங்கள் பார்ப்போம்?" என்று செய்தியாளர்களிடம் கேட்டார். அதற்கு ஒரு செய்தியாளர் "அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறதே" எனக் கூறினார். அதற்கு பதில் அளித்த சீமான், "அதை இப்படி பாருங்கள். திராவிட கட்சிகள் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தும் காலையில் சாப்பிட்டுவிட்டுக் கூட வர முடியாத அளவுக்கு நமது பிள்ளைகளை வறுமையில் வைத்திருக்கிறீர்களா? இது என்ன தமிழ்நாடா? இல்லை சோமாலியாவா? கென்யாவா? அல்லது நைஜீரியாவா? தமிழ்நாட்டில் தான் எல்லா வளமும் இருக்கிறதே. அப்புறம் என்ன? அப்படியே பார்த்தாலும் காலை உண்வுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு பாலும், முட்டையுமா கொடுக்கிறார்கள்? வாரத்தில் 7 நாட்களில் 5 நாட்கள் உப்புமா தான் போடுகிறார்கள். நீங்கள் உப்புமா கம்பெனி தான் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்" என்று காட்டமாகப் பேசினார். சீமானின் இந்த பேச்சுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். "ஏழை எளிய பெற்றோர்களின் குழந்தைகள் தினமும் சாப்பிட வழியில்லாமல் வெறும் வயிற்றில் பள்ளிக்கு வருகின்றனர். இதனால் அவர்களால் கல்வியில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. இதை அறிந்துதான் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்தத் திட்டத்தை தொடங்கியதற்கான காரணத்தை முதல்வர் பல்வேறு தருணங்களில் தெரிவித்திருக்கிறார். ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகளின் பசி தீர்க்கும் இந்த திட்டத்தை தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர். எனவேதான், சீமான் திமுகவுக்கு நல்ல பெயர் கிடைக்கிறதே என்கிற விரக்தியில், ஏழை, எளிய மக்களுக்கு எதிராக பேசி இருக்கிறார்" என சீமான் கருத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்வினை ஆற்றி உள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post