திறந்து ஒரு மாசம் ஆச்சு இன்னும் இப்படியா? பார்க்டவுன் ஸ்டேஷன்.. ஆதங்கப்படும் பயணிகள்! என்ன நடக்கிறது

post-img
சென்னை: சென்னை வேளச்சேரி - கடற்கரை ரூட்டில் மிகவும் பிசியாக காணப்படும் ரயில் நிலையம் என்றால் அது பார்க் டவுன் ஸ்டேஷன்தான். பீக் நேரங்களில் பிளாட்ம்பார்ம் முழுக்க பயணிகள் கூட்டம் அலைமோதும். சென்னையில் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றாக காணப்படும் பார்க் டவுன் ஸ்டேஷன் செல்லும் பாதைகளில் சீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்று பயணிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். சென்னை வேளச்சேரி - கடற்கரை இடையே பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. எம்.ஆர்.டி.எஸ் எனப்படும் இந்த மின்சார ரயில் சேவை சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைப்பதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது. சென்னை கடற்கரைக்கு பதிலாக சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்பட்டது. திருவான்மியூர், வேளச்சேரி போன்ற பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும் இந்த ரயில்களையே நம்பியிருப்பதால், கடந்த ஓராண்டாக பயணிகள் அவதி அடைந்தனர். 4-வது வழித்தடத்திற்கான பணிகள் முடிவடைந்ததால், கடந்த அக்டோபர் மாதம் முதல் சென்னை பீச் வரை வேளச்சேரி ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதேவேளையில் பார்க் டவுன் ஸ்டேஷனில் ரயில்கள் நின்று செல்லவில்லை. பணிகள் முடிவடையாமல் இருந்ததால் இரண்டு வாரங்கள் கழித்து பார்க் டவுன் ஸ்டேஷனில் இருந்து ரயில்கள் நின்று செல்ல தொடங்கின. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பார்க் டவுன் ஸ்டேஷன் வரும் பயணிகள் அங்கிருந்து வேளச்சேரி பறக்கும் ரயிலில் பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சென்னை கோட்டை ரயில் நிலையத்தை விட, பார்க் டவுன் ஸ்டேஷனில் தான் பயணிகள் கூட்டம் பீக் நேரங்களில் அலை மோதும். முன்பு பார்க் ஸ்டேஷனில் இருந்து பார்க் டவுன் ஸ்டேஷன் ரயில் நிலையம் செல்ல சுரங்கப்பாதை இருந்தது. தற்போது 4-வழித்தட பணிகள் காரணமாக சுரங்கப்பாதை மூடப்பட்டு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த நடை மேம்பாலமும் மிகவும் குறுகலாக உள்ளதாக பயணிகள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள். பார்க் டவுன் ஸ்டேஷனில் இருந்து ஏறும் போதும், இறங்கும் போதும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டியிருப்பதாகவும், ஒரே நேரத்தில் அதிக அளவில் பயணிகள் வரும் போது குறுகலான பாதை இருப்பதால் படிக்கட்டுகளில் கஷ்டப்பட்டு ஏற வேண்டியிருக்கும் நிலை உள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இது ஒரு பக்கம் என்றால், பார்க் டவுன் ஸ்டேஷனில் இருந்து பார்க் ஸ்டேஷன் வரை செல்லும் நடைபாதையிலும் இன்னும் பணிகள் முடிவடையாமல் உள்ளது. நடைபாதை ஓடுகள் பதிக்கும் பணிகள் இன்னும் முழுமை அடையாமல் உள்ளன. கேபிள்களும் முழுமையாக பதிக்கப்படாமல் உள்ளன. இதனால், கால் இடறி தடுமாற வேண்டிய நிலை உள்ளதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மழை பெய்தால் இன்னும் நிலைமை மோசமாக இருப்பதாகவும் பயணிகள் கூறியுள்ளனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் செல்லும் பாதையில் பணிகள் நிறைவு செய்யாமல் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது எந்த வகையில் நியாயம் என்று பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து பணிகளும் முடிந்து விடும். பயணிகள் தெரிவிக்கும் அனைத்து புகார்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும்" என்றனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post