செஸ் உலகை வியக்க வைத்த பிரக்ஞானந்தா.. உச்சபட்ச ஜிஐ மார்க்.! விஸ்வநாதன் ஆனந்த்தை விட அதிகமாம்

post-img
சென்னை: தமிழ்நாட்டின் முன்னணி செஸ் வீரர்களில் ஒருவர் பிரக்ஞானந்தா. கடந்தாண்டு பல்வேறு செஸ் தொடர்களில் வெற்றி பெற்றுள்ள பிரக்ஞானந்தா, 2024ஆம் ஆண்டில் செஸ் விளையாட்டில் அதிகபட்ச விளையாட்டு நுண்ணறிவு (ஜிஐ) மார்க்கை பெற்று இருக்கிறார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம். செஸ் விளையாட்டில் தலைநகராகவே தமிழ்நாடு மாறி வருகிறது என்று நாம் சொல்லலாம். அந்தளவுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் சர்வதேச அளவில் பல தொடர்களில் வெற்றிக்கொடியை நாட்டி வருகிறார்கள். பிரக்ஞானந்தா: சமீபத்தில் கூட தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்று வாகை சூடினார். அதேபோல தமிழகத்தில் உள்ள மற்றொரு முக்கியமான செஸ் வீரர் பிரக்ஞானந்தா. இவர் கடந்தாண்டு நடந்த செஸ் போட்டி ஒன்றில் அதிகபட்ச ஜிஐ மார்க், அதாவது விளையாட்டு நுண்ணறிவு மார்க்கை பெற்று சாதனை படைத்துள்ளார். உலகிலேயே ஒருவரால் அதிகபட்சம் எவ்வளவு மார்க் வாங்க முடியுமோ.. அந்தளவுக்கு மார்க்கை பிரக்ஞானந்தா பெற்றிருக்கிறார். உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராகக் கடந்த ஆண்டு நார்வேயில் நடந்த செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் தான் பிரக்ஞானந்தா அதிகபட்சமாக 177 ஜிஐ ஸ்கோரை பதிவு செய்தார். லண்டன் பேராசிரியர்: லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் பொருளாதார பேராசிரியர் டாக்டர் மெஹ்மத் இஸ்மாயில் என்பவர் மனித செயல்திறன் மற்றும் என்ஜின் அனாலசிஸை ஒருங்கிணைத்து ஒரு கண்டுபிடிப்பை மேற்கொண்டு இருக்கிறார். அதில் தான் இது தெரிய வந்துள்ளது. நார்வேயில் நடந்த போட்டியில் பிரக்ஞானந்தா ஆட்டம் வேற லெவலில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார் இஸ்மாயில். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "19 வயதான பிரக்ஞானந்தா அந்த குறிப்பிட்ட போட்டியில் கிட்டதட்ட 100% துல்லியமான ஆட்டத்தை விளையாடியிருக்கிறார். அதில் கார்ல்சனை அவர் தோற்கடித்து இருந்தார்.. அந்த போட்டியில் தோற்று இருந்தாலும் கூட தனக்கு மறக்கமுடியாத போட்டியாக கார்ல்சன் அந்த போட்டியையே கூறியதை நான் இங்கு நினைவுகூர விரும்புகிறேன்" என்றார். மற்ற வீரர்கள்: இவர் மற்ற செஸ் வீரர்களின் போட்டியையும் ஆய்வு செய்து ஜிஐ மார்க்கை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் டிங் லிரனை வீழ்த்திய டி குகேஷ் அந்த தொடரில் 159.28 மார்க் பெற்றிருந்தார். கார்ல்சன் அனைத்து உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 160.13 பெற்றிருந்தார். மறுபுறம் இந்தியாவின் தலைசிறந்த செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் 158.69 GI மார்க் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தனது இந்த ஜிஐ மார்க் தொடர்பாக டாக்டர் இஸ்மாயில் மேலும் கூறுகையில், "நான் பல லட்சம் செஸ் போட்டிகளை விரிவாக ஆய்வு செய்தே இந்த முறையை உருவாக்கியிருக்கிறேன். ஒரு வீரர் எந்தளவுக்கு கால்குலெட் செய்து ரிஸ்க் எடுக்கிறார் என்பதே இதன் கணக்கீடு முறையாகும். சராசரியாக ஒரு செஸ் வீரரின் ஐஜி மார்க் 100 ஆக இருக்கும். சுமார் 68% வீரர்கள் 85 முதல் 115 வரையிலான மார்க்கை பெறுகிறார்கள். அதேநேரம் சர்வதேச அளவில் நடக்கும் தொடர்களில் வெல்லும் வீரர்கள் கிட்டதட்ட 160 என்ற அளவில் மார்க் பெறுகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post