ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை.. எதிர்க்கட்சிகள் அமைக்கும் சக்கர வியூகம்!

post-img
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தீவிரமாக கையில் எடுக்க வியூகம் அமைத்துள்ளதாகத் தெரிகிறது. தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நாளை (ஜனவரி 6 திங்கள் கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அப்போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். நேற்று முன்தினம் சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு, சபாநாயகர் மு.அப்பாவு மற்றும் சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்ற வரும்படி அழைப்பு விடுத்தனர். கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது, அரசு தயாரித்து அளித்த உரையில் இடம்பெற்றிருந்த கருத்துகளை விடுத்தும் சிலவற்றை சேர்த்தும் வாசித்ததால் சர்ச்சை எழுந்தது. அதன்பின், சட்டப்பேரவை குறிப்பில் அரசு தயாரித்து அளித்த உரை மட்டுமே இடம்பெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு முதல் கூட்டத்துக்கான ஆளுநர் உரை, தமிழக தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளை சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியதும் ஆளுநர் ரவி உரை நிகழ்த்தி முடித்ததும், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவுபெறும். நாளையே அலுவல் ஆய்வுக்குழு கூடி, ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவெடுத்து அறிவிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைந்ததால் ஜனவரி 7 ஆம் தேதி அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது. அதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை வரை 3 நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், வார்டு மறுவரையறை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் ஊரக உள்ளாட்சிகளை சேர்க்கும் பணிகள் முடிந்த பிறகு நடைபெறும் என அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. எனவே, அதுவரை ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமிக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு வரும் சட்டபேரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என கூறப்படுகிறது. மேலும், சில மசோதாக்களை நிறைவேற்றவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தீவிரமாக கையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில், "யார் அந்த சார்?" எனக் கேள்வி எழுப்பி, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் சட்டசபையில் கடுமையாக எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, ஆளும் திமுகவின் கூட்டணியில் உள்ள விசிக சார்பில் வேங்கைவயல், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை விவாதிக்கக் கோரி கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post