மனிதன் மகிழ்ச்சியாக இருக்க தடையாக இருப்பது மூடநம்பிக்கை! நடிகர் சத்யராஜ் கலகலப்பு பேச்சு

post-img
சென்னை: மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு தடையாக இருப்பது மூடநம்பிக்கை மட்டுமே என நடிகர் சத்யராஜ் தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசியிருந்தார். திருச்சியில் இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆவது மாநாடு நடந்தது. இரு நாட்கள் நடந்த இந்த மாநாட்டின் நிறைவாக பொதுக் கூட்டம் நடந்தது. இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியிருப்பதாவது: பெரியாரை உலகமயமாக்குவோம், உலகை பெரியாமயமாக்குவோம், பெரியார்மயமாக்குவோம் என்பது எல்லோரையும் பகுத்தறிவாக்குவதாகும். பகுத்தறிவு சிந்தனை கொண்டவர்கள் ஒன்றிணைந்து இந்தியாவை பெரியார்மயமாக்கி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். குழந்தைகள் நாத்திகனாகதான் பிறக்கிறார்கள். அவர்கள் எந்த குடும்பத்தில் பிறக்கிறார்களோ அவர்களின் குடும்பத்தினர் மத நம்பிக்கைகளை திணித்து குழந்தைகளை மதத்திற்குள் இறுக்கமாக்கி விடுகிறார்கள். வேதங்களை உருவாக்கி ஒரு கற்பனை தலைவனை உருவாக்கி வைத்திருப்பது மிக பெரிய கொடுமை. வைக்கத்தில் பெரியார் போராட்டம் நடத்திய போது அங்கு சிலர் பெரியார் மரணிக்க வேண்டும் என யாகம் நடத்தினார்கள். மனிதராக பிறந்தவர்கள் அறிவியலை பயன்படுத்தி மனித சமூகத்திற்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும். மூடநம்பிக்கைகளை வைத்துக் கொண்டு பல விஷயங்கள் நடக்கும். சினிமாவில் செத்து போனது போல் நடித்தால் அப்படி நடித்தவர்களுக்கு தேங்காய் வைத்து சுற்றி போடுவார்கள். கேமராவை பார்த்து ஒரு முறை சிரிக்க வேண்டுமாம். இல்லாவிட்டால் நிஜமாகவே செத்து போய்விடுவோமாம். 47 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடித்த முதல் படம் சட்டம் என் கையில்! அதில் நான் இறந்து போவது போல் காட்சி இருக்கும். இந்த காட்சி முடிவில் தேங்காயால் சுற்றி போட வந்தார்கள், நான் ஓடிவிட்டேன். கேமராவை பார்த்து ஒரு முறை சிரிக்குமாறும் கேட்டார்கள். நான் அதெல்லாம் முடியாது என சொல்லிவிட்டேன். 47 ஆண்டுகளாகிறது, நான் உயிரோடுதான் இருக்கிறேன். எப்போதும் பகுத்தறிவாளனாகவே காட்டிக் கொண்டிருக்க வேண்டும். கெத்து என்ற ஒரு படம்! இதில் துணை முதல்வர் உதயநிதி நடித்திருக்கிறார். நானும் நடித்தேன். அந்த காட்சியில் உதயநிதி இல்லை, மேல ஏறி ஒரு விஷயத்தை பார்ப்பது போன்று சீன்! அப்போது ஸ்லிப்பாகி காலில் பலமாக அடி விழுந்தது. இதில் ரத்தம் கட்டிக் கொண்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். பொதுவாக அறுவை சிகிச்சைகள் நல்ல நாள், நேரம் பார்த்துதான் செய்வார்கள். ஆனால் நான் செவ்வாய்க்கிழமையில் ராகு காலத்தில் அறுவை சிகிச்சை செய்யுமாறு கேட்டேன். அந்த மருத்துவர், "விளையாடாதீங்க, வேறு நல்ல நாள் பாருங்கள்" என்றார். நான் உடனே, "உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்குதா, எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை இருக்கு. எனவே நான் சொன்ன நேரத்திலேயே அறுவை சிகிச்சை செய்ங்க" என்றேன். அவரும் அறுவை சிகிச்சை செய்தார். அது முடிந்து 10 ஆண்டுகளாகிறது. ஆனாலும் நான் நன்றாகத்தானே இருக்கிறேன். எந்த மூடநம்பிக்கையும் இல்லாத வாழ்க்கைதான் மிகவும் சுலபமான வாழ்க்கை. பெரியார் வழியில் கடவுள் மறுப்பு என்றால் சமூக மகிழ்ச்சிக்காக அவர் பேசினார். கடவுள் இருக்காரா இல்லையா என்பது பிரச்சினை இல்லையே! மனிதனுக்கு ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது. ஒரே இடத்தில் பணம் போய் குவியக் கூடாது. அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் சமமான உரிமை, கல்வி, வேலைவாய்ப்புகள் வேண்டும். அதற்கு தடையாக இருக்கும் சாஸ்திரம் சம்பிராதாயம், அதற்கு head of the department ஆக உள்ள கடவுளை மறுப்பது! தனிமனித மகிழ்ச்சிக்கு தடையாக இருப்பது இந்த மூடநம்பிக்கைகள்தான்! அத்தனை மூடநம்பிக்கைகளையும் தூக்கி வீசிவிட்டீர்கள் என்றால் நீங்கள் ஃப்ரீ பேர்டுதான். சிறகடித்து பறக்கலாம். எதை பற்றியும் கவலை வேண்டாம். இன்றைய சூழலில் நமக்கு அமைந்த வாய்ப்புகளில் எது சிறந்தது? என்பதை தேர்வு செய்து வாழ்க்கை பயணத்தை நடத்திக் கொண்டு போய்க் கொண்டே இருப்போம். இவ்வாறு சத்யராஜ் பேசினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post