விஜய் ஏன் வரவில்லை? விஜயகாந்த் பற்றி ஒரு பதிவு போடாதது ஏன்? நடிகர் சங்கம் எங்கே?

post-img
சென்னை: முதலாம் ஆண்டு விஜயகாந்த் நினைவு நாள் அன்று அவரைப் பற்றி எக்ஸ் தளத்தில் ஒரு பதிவைக் கூட ஏன் விஜய் வெளியிடவில்லை என்ற கேள்வியை தேமுதிக தொண்டர்கள் முன்வைத்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் மறைந்ததை அடுத்து அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளில் தேமுதிக தொண்டர்கள் பெரிய அளவில் கூடி கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதனால் அந்தப் பகுதியே மாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. யாருமே எதிர்பார்க்காத விதமாக விஜயகாந்த் நினைவு நாளை 'குரு பூஜை' எனக் குறிப்பிட்டு பிரேமலதா விஜயகாந்த் ஏற்பாடு செய்திருந்தது சிலரது விமர்சனத்திற்கு உள்ளானது. சினிமா பத்திரிகையாளர்களே சிலர் அதைக் கண்டித்துப் பேசி இருந்தனர். சிலர் தேவர் குரு பூஜைக்குப் போட்டியாக விஜயகாந்த் குரு பூஜை செய்துள்ளதாகச் சுட்டிக்காட்டிப் பேசி இருந்தனர். இந்த நினைவஞ்சலி கூட்டத்திற்கு வருகை தந்த பலருக்கும் பிரேமலதா நன்றி தெரிவித்திருந்தார். ஆனால், பலரும் விஜய் நினைவிடத்திற்கு வருவார் என எதிர்பார்த்தனர். அவருக்குப் பதிலாக புஸ்ஸி ஆனந்த் போய் அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கே கூடியிருந்த தேமுதிக தொண்டர்களுக்கும் அவருக்கும் சில வாய் தகராறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. விஜய் நினைவிடத்திற்கு வர வேண்டும் என்பது இல்லை. அவரை இயக்கிய இயக்குநர்கள் பலன்பெற்ற நண்பர்கள் எனப் பலரும் அங்கே வரவில்லை என்பதுதான் வேதனை. விஜயகாந்த் மீதுள்ள அன்பைவிட பிரேமலதா மீது உள்ள கசப்பு அதிகமாக இருந்ததால் பலர் வராமல் தவிர்த்துள்ளனர். இதுதான் முதல் ஆண்டு நினைவஞ்சலி. அதற்கே திரைத்துறையினர்,நடிகர் சங்க நிர்வாகிகள் என யாரையும் அங்கே காணவில்லை. இதில் விஜய்யைக் குறிப்பாக சமூக ஊடகங்களில் சிலர் குறிப்பிட்டு கேள்வி எழுப்பிவருகின்றனர். சினிமா பத்திரிகையாளர் அந்தணன் கூட இதைக் கேள்வியை முன்வைத்திருக்கிறார். விஜய் வருவதற்காக காவல்துறையில் அனுமதி கேட்டு மறுக்கப்பட்டதால், அவர் வரவில்லை என்று ஒரு சாக்கு சொல்லப்படுகிறது. ஆனால், காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அளித்ததாக எந்தப் பதிவேட்டிலும் தகவல் இல்லை. அப்படி இருந்திருந்தால் காவல்துறை அதை வெளியிட்டிருக்கும் என்கிறார்கள். அப்படி எனில் பலரது நினைவு நாள் அன்று வீட்டில் புகைப்படத்தைவைத்து மலர் அஞ்சலி செலுத்தும் விஜய் ஏன் விஜயகாந்த் பற்றி ஒரு ட்வீட் கூட போடவில்லை? என்று கேள்வி எழும்புகிறது. தேவர் ஜெயந்தி, பெரியார் நினைவுநாள் என விஜய் இப்போது அஞ்சலி செலுத்தி வருகிறார். ஆனால் இவர் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே விஜயகாந்த்தை சக நடிகராக அறிந்தவர். இளம் வயதில் விஜயகாந்த் புகழால் வெள்ளித்திரையில் வெற்றி பெற்றவர் விஜய். அவருக்கு சக நடிகராக ஒரு அஞ்சலியைச் செலுத்தி இருக்கலாமே? என்கிறார்கள். விஜயகாந்த் ஆரம்பக் காலத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆஸ்தான நடிகராக இருந்தார் என்பதைப் பலர் அறிவார்கள். இவரை வைத்து 11 படங்கள் மேல் இயக்கி இருக்கும் எஸ்.ஏ.சி. வசந்த ராகம், சாட்சி,நீதியின் மறுபக்கம் என கிட்டத்தட்ட 5 படங்களில் விஜயகாந்த்தின் இளம் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க வைத்திருக்கிறார். வளர்ந்த பிறகு மட்டும் அல்ல; இளம் வயதிலேயே விஜயகாந்த் விரல் பிடித்து சினிமா கற்றவர் விஜய். அப்படியான ஒரு நல்ல உள்ளம் கொண்டவரின் படத்தை எக்ஸ் தளத்தில் போட்டு அன்பை வெளிப்படுத்துவதில் என்ன சங்கடம் இருக்கப்போகிறது என்கிறார்கள். 'கோட்' படத்தில் அவரது உருவத்தை ஏஐ மூலம் வைத்து மரியாதை செய்தது உண்மை எனில், அவரது நினைவு நாளில் அஞ்சலி சொல்வதுதானே முறை என்கிறார்கள் தேமுதிக தொண்டர்கள். அவர் உடல்நிலை சரியில்லாமல் வாழ்ந்த போதே விஜய் ஒருமுறைகூட போய் நேரில் நலம் விசாரிக்கவே இல்லை. விஜயகாந்த்தை எதிரியாகப் பார்த்தவர்கள் கூட அவர் வீட்டுக்குப் போய் நலம் விசாரித்தனர். ஆனால், விஜய் போகவில்லை. அதனால்தான் அவர் மறைந்த போது உடலுக்கு மரியாதை செலுத்தச் சென்ற போது விஜய் மீது செருப்பு வீசப்பட்டது. ஒரு அடிமட்ட தொண்டன் அந்தக் காரியத்தை கோபத்தில் செய்தான். அது தவறுதான் எனில், அதிலிருந்து விஜய் தன்பக்கம் உள்ள தவறை சரி செய்து கொள்ள முயற்சி செய்திருக்க வேண்டும் என்பது விஜயகாந்த்தை உண்மையாக நேசிக்கும் மக்களின் விருப்பமாக இருக்கிறது. விஜயகாந்த் மகன்கள் சமீபத்தில் விஜய்யை வேறு சில விசயங்களுக்காகச் சந்தித்துப் பேசிய தகவலும் கிடைத்திருக்கிறது. விஜயகாந்த் மகன் பிறந்தநாள் அன்று விஜய் தொலைபேசி மூலம் வாழ்த்துக் கூறி இருக்கிறார் என்றும் தெரிகிறது. இந்த நினைவு நாளில் விஜய் தொலைப்பேசியில் அழைத்துப் பேசியதாக ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 'கோட்' படத்தில் மரியாதை செய்தது என்பது விஜய் விருப்பமா? இல்லை இயக்குநர் விருப்பமா? என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post