ஆளுநர் பதவியை ரத்து செய்ய சொல்லிவிட்டு ஆளுநரை நேரில் சந்திக்கும் தவெக விஜய்- கிளம்பும் விமர்சனங்கள்!

post-img
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் ஆளுநர் பதவியையே ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேச இருக்கிறாரே? என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருந்தபோதும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஆளுநர் பதவிக்கு எதிராக பேசினாலும் ஆளுநர் பதவி இருக்கும் வரை ஆளுநரை சந்திப்பது ஒன்றும் தவறும் இல்லை; கொள்கைகளுக்கு எதிரானதும் இல்லை என்கிற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார சம்பவம் தொடர்பாகவும் தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கு குறித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சந்தித்து பேச இருக்கிறார் என்கிற தகவல்கள் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளன.. திமுக ஆட்சிக்கு எதிரான தவெக தலைவர் நடிகர் விஜய்யின் இந்த நடவடிக்கை பெரும் எதிர்பார்ப்புக்குரியதாகவும் பேசு பொருளாகவும் மாறி இருக்கிறது. அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. போராட்டங்கள், போஸ்டர் யுத்தம் என பல்வேறு வியூகங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது அதிமுக. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ தமக்கு தாமே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த வரிசையில் திமுகவை முதன்மை எதிரியாக அறிவித்துள்ள தவெகவின் தலைவர் நடிகர் விஜய் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேச இருக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் டெல்லியில் முகாமிட்டு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்துவிட்டு சென்னை திரும்பினார். டெல்லி சந்திப்புகளுக்குப் பின்னர் சென்னை திரும்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் நடிகர் விஜய் சந்திப்பது குறித்து பல்வேறு விவாதங்கள், விமர்சனங்கள் எழுந்துள்ளன. அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்துக்காக மட்டுமா ஆளுநர் ரவியை நடிகர் விஜய் சந்திக்கப் போகிறார்? அல்லது திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தும் வகையிலான ஆலோசனைகள் நடைபெறப் போகிறதா? என்கிற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.ராசேந்திரன் தமது எக்ஸ் பக்கத்தில்,வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று ஆளுநரை சந்திக்கிறார்; ஆளுநர் பதவியே கூடாது என்று தனது கட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநரிடம் நேரில் கையளிக்கவே இந்த அவசர அவசரமான சந்திப்பு போலும் என விமர்சித்துள்ளார். அதேநேரத்தில் ஆளுநர் பதவி என்பது ஆட்டுக்கு தாடி என்றார் பேரறிஞர் அண்ணா. ஆளுநர் பதவியையே ரத்து செய்ய வேண்டும் என்பது திமுகவின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. அதே போல ஆளுநர் பதவி மீது அதிமுகவும் விமர்சனங்களை முன்வைக்கிறது. ஆனாலும் திராவிட கட்சிகள், ஆளுநர் பதவி இருக்கும் வரை ஆளுநரை புறக்கணித்துவிட முடியாது என்கிற யதார்த்தத்தை புரிந்து கொண்டுதான் செயல்படுகின்றன. அதே நியாயங்கள், நடிகர் விஜய்க்கும் பொருந்தும்தானே.. இதில் ஏன் கொள்கை கோட்பாடுகளை திணிக்க வேண்டும் என்கிற கேள்வியையும் மூத்த பத்திரிகையாளர்கள் முன்வைக்கின்றனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post