சினிமாவாக மாறும் ராமதாஸ் வாழ்க்கை..! ஸ்கிரிப்ட் ரெடி..! அன்புமணி மகள் கொடுத்த அப்டேட்

post-img
சென்னை: டாக்டர் ராமதாஸின் பேத்தி சங்கமித்ரா தனது தாத்தாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். ஒரு காலத்தில் சினிமா துறை மீதும் குறிப்பாக ரஜினி மீதும் அதிரடியான தாக்குதலை நடத்தியவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். 'பாபா’ வெளியான போது பாமகவுக்கும் ரஜினிக்கும் இடையே பெரிய மோதல் நிலவியது. மத்திய அமைச்சராக இருந்தபோது ரஜினி புகைப் பிடிக்கும் காட்சிகளை வைத்து அரசியல் செய்தது பாமக. அதுவும் சர்ச்சையானது. சில ஆண்டுகள் முன்பு கூட சூர்யாவின் 'ஜெய்பீம்’ படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நீக்க வேண்டும் என பாமக தரப்பிலிருந்து சர்ச்சை எழுந்தது. ஆனால், அதற்கு சூர்யா இறுதிவரை விளக்கமளிக்கவே இல்லை. இப்படிப் பலமுறை பாமக Vs தமிழ் சினிமா என ஒரு மோதல் போக்கு தொடர்ந்து இருந்து வந்துள்ளது. ஆனால், இத்தனை ஆண்டுகளைக் கடந்து டாக்டர் ராமதாஸ் குடும்பத்திலிருந்தே ஒரு சினிமாவுக்கு வருவார் என்பதை அவர் மட்டுமல்ல, அவரது கட்சி தொண்டர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அன்புமணியின் மகள் சங்கமித்ரா இப்போது தயாரிப்பாளராகக் களம் இறங்கி 'அலங்கு’ என்ற படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். இதற்குக் கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. இந்நிலையில்தான் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கையைப் பற்றி கதையை ஆய்வு செய்து வைத்திருக்கிறேன் என்று சங்கமித்ரா தெரிவித்திருக்கிறார். அதற்காக திரைக்கதைகூட தயார் நிலையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அது அரசியல் சம்பந்தமான கதை என்பதால் தவறுகள் எதுவும் வந்துவிடாமல் பார்த்து கவனமாகச் செய்ய வேண்டும். அதற்கான அவகாசம் தேவைப்படுகிறது எனவும் அவர் பேசி இருக்கிறார். “தாத்தாவைப் பற்றி எடுக்கவேண்டும் என்பது ஒரு ஆசை. அது எந்தளவுக்கு அமையும் என சொல்ல முடியாது. அதை நான் தான் எடுப்பேனா என்பது தெரியவில்லை. அப்படி அமைந்தால் நன்றாக இருக்கும். அப்பாவிடம் கூட கதையைச் சொன்னேன். அவருக்கும் தாத்தாவின் கதை தெரிய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. 'நன்றாக அதை எடு’ என்று அப்பா சொன்னார். தாத்தாவின் கேரக்டருக்கு ஏற்ற மாதிரி நடிகர் வேண்டும். அந்தக் கதைக்கான நடிகர்கள் அமைய வேண்டும். அப்படி அமையும் போதுதான் அதை எடுப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார். சினிமா துறை மீதும் நடிகர்கள் மீதும் ஒருவித ஒவ்வாமை ஆரம்பக் கட்டத்திலிருந்தே பாமகவுக்கு இருந்துள்ளது. நடிகர்களுக்கு என்ன தெரியும் என்று பலமுறை விமர்சனத்தை பாமக தலைமை முன்வைத்திருக்கிறது. குறிப்பாக விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது பாமக அவரைக் கடுமையாக எதிர்த்தது. கள்ளக்குறிச்சியில் பாமக மற்றும் தேமுதிக தொண்டர்கள் இடையே மோதல் போக்கும் நிலவியது. அதன்பின் கடந்த 5 ஆண்டுகள் முன் தேமுதிகவுடன் பாமக கூட்டணி வைத்தது. விஜயகாந்த் வீடு தேடி அன்புமணியும் ராமதாஸும் சென்று சந்தித்து கூட்டணி வைத்தனர். அதைப் போலவே ஒரு மாற்றம் இப்போது வந்துள்ளது. சினிமாவில் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கும்போது அவரது தொண்டர்கள் அதை இன்னும் உற்சாகத்துடன் கொண்டாட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் மோகன் ஜி போன்ற இயக்குநர்கள் பாமகவின் அரசியல் நிலைப்பாட்டை சினிமா மூலம் முன்வைக்கும் போக்கு உருவாகி உள்ள நிலையில், இப்போது சங்கமித்ராவின் வருகை அந்தக் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கலாம். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post