பிரதமரானாலும் ரூ.700 வாடகை வீட்டில் வசித்த மன்மோகன் சிங்.. அசாமுடன் இப்படியொரு பந்தமா? நெகிழ்ச்சி

post-img
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமரானாலும் கூட அசாமில் ரூ.700 வாடகையில் வசித்து வந்த 2 பெட்ரூம் வீட்டை மாற்றவே இல்லை என்ற சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. மன்மோகன் சிங் ஏன் அசாமில் வாடகை வீடு எடுத்து தங்கினார்? டெல்லியில் இருந்த தனது மற்றும் மனைவியின் ஓட்டை அசாமுக்கு மாற்றியது ஏன்? என்பது பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரை நம் நாட்டின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றினார். முதலில் அவர் மத்திய நிதி அமைச்சராக இருந்த பிறகு தான் பிரதமர் பதவியை ஏற்றார். இந்நிலையில் தான் மன்மோகன் சிங் தனது வயோதிகள் காரணமாக 92வது வயதில் நேற்று காலமானார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப்பிரச்சனையால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் காலமானார். நாளை அவரது உடலுக்கு இறுதி சடங்கு நடக்க உள்ளது. இந்நிலையில் தான் மன்மோகன் சிங் பற்றிய பல்வேறு சுவாரசிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பிரதமராக இருந்தாலும் கூட மன்மோகன் சிங் அசாம் மாநிலத்தில் ரூ.700 வாடகை வீட்டில் வசித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு: அதாவது மன்மோகன் சிங் முதல் முதலாக கடந்த 1991ம் ஆண்டில் தான் அரசியலுக்குள் நுழைந்தார். அப்போது காங்கிரஸ் சார்பில் பிரதமராக தேர்வான பிவி நரசிம்ம ராவ் தனது மத்திய அமைச்சரவையில் மன்மோகன் சிங்கிற்கு நிதி அமைச்சராக பதவி கொடுத்தார். தேர்தலில் போட்டியிடாத மன்மோகன் சிங் 6 மாதத்துக்குள் எம்பியாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து மன்மோகன் சிங் அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அந்த சமயத்தில் அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தது. அப்போது அங்கு முதல்வராக இருந்தவர் ஹிதேஸ்வர் சாய்கியா. மன்மோகன் சிங்கை அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக்க பிவி நரசிம்மராவ், சார்பில் ஹிதேஸ்வர் சா்கியாவுக்கு உத்தரவிடப்பட்டது. மன்மோகன் சிங் அசாம் மாநிலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவருக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மன்மோகன் சிங் வேற்று மாநிலத்தை சேர்ந்தவர் என்று கூறி மன்மோகன் சிங்கிற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், மன்மோகன் சிங் அசாம் மாநிலத்தை சேர்ந்தவராக இல்லாமல் இருந்தாலும், அங்கு முகவரி இல்லாவிட்டாலும் கூட அவர் போட்டியிடலாம் என்று உத்தரவிட்டது. இதையடுத்து தான் மன்மோகன் சிங் ராஜ்யசபா எம்பியானார். முன்னதாக இந்த வழக்கு தொடரப்பட்ட சமயத்தில் அசாம் முதல்வர் ஹிதேஸ்வர் சாய்கியாவின் வீட்டு வளாகத்தில் உள்ள 2 பெட்ரூம் கொண்ட வீடு மன்மோகன் சிங்கிற்கு வாடகைக்கு வழங்கப்பட்டது. மாத வாடகை ரூ..700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மன்மோகன் சிங்கிற்கு எதிரான வழக்கை உடைக்கும் நோக்கத்தில் இந்த வீட்டை முதல்வர் ஹிதேஸ்வர் சாய்கியா மற்றும் அவரது மனைவி ஹெமோபிரவா சாய்கியா ஆகியோர் வழங்கினர். இதன்மூலம் மன்மோகன் சிங்கிற்கு 3989, நந்தன் நகர், சாரும்ட்ரியா, கவுஹாத்தி என்ற முகவரி கிடைத்தது. அதன்பிறகு அசாம் ராஜ்யசபா எம்பியாக 5 முறை மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார். அசாம் ராஜ்யசபா எம்பியாகவே மன்மோகன் சிங் பிரதமரானார். மேலும் அசாம் மீது கொண்ட பற்றால் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அந்த முகவரிக்கு தங்களின் ஓட்டை மாற்றம் செய்தனர். இதனால் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவியின் பெயர்கள் அசாம் மாநிலம் திஸ்பூரில் உள்ள வாக்குச்சாவடி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இருவரும் அசாம் மாநில சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் தான் வாக்களித்து வந்தனர். அதாவது டெல்லியில் இருந்த இருவரின் ஓட்டும் அசாம் மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த 2019ல் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்பாக 1991ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை மன்மோகன் சிங்கின் முகவரி அசாமின் கவுஹாத்தியாக தான் இருந்தது. மன்மோகன் சிங் தனது இரண்டாவது சொந்த மாநிலமாக அசாமை நினைத்தார். இதுபற்றி அசாம் முன்னாள் முதல்வர் ஹிதஸ்வர் சாய்கியாவின் மனைவி ஹெமோபிரவா சாய்கியா என்டிவியிடம் கூறியுள்ளதாவது: ‛‛மன்மோகன் சிங்கை அரசியலுக்கு கொண்டு வர நரசிம்ம ராவ் விரும்புவது பற்றி எனது கணவரிடம் தெரிவித்தார். இதனால் எங்கள் வீட்டு வளாகத்தில் உள்ள வீட்டை மன்மோகன் சிங்கிற்கு வாடகைக்கு வழங்கினோம். மன்மோகன் சிங் அசாமில் போட்டியிடுவதை பலரும் விரும்பாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அசாமில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவோருக்கு வீடு வேண்டாம் என்று உத்தரவிட்டது. ஆனாலும் மன்மோகன் சிங் தொடர்ந்து அசாம் முகவரியில் இருந்தார். 2 பெட்ரூம் கொண்ட வீடு தான் அவரது முகவரி. இதற்காக ரூ.700 வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. மன்மோகன் சிங் அசாமிக்க பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். நீண்டகால கோரிக்கையான என்ஆர்சிக்கு ஒப்புதல் வழங்கினார். மன்மோகன் சிங் சிம்பிளான மனிதர். அதேநேரத்தில் நேர்மையான மனிதர். அவர் ஒவ்வொருமுறை அசாம் வரும்போது நாங்கள் குடும்பமாக அமர்ந்து பேசுவோம். எனது கணவர் இறந்த பிறகு பல நபர்கள் அவருக்கு சொகுசான அப்பார்ட்மென்ட்டுகளை வழங்கினார். அதேபோல் என் கணவர் முதல்வராக இருக்கும்போதும் சொகுசு பங்களாவை ஒதுக்க முடிவு செய்தார். ஆனால் மன்மோகன் சிங் அதனை பெற மறுத்துவிட்டார். 2 பெட்ரூம் வீடே போதும் என்று இருந்தார். ஒவ்வொரு முறையும் சரியாக வாடகை பணத்தை தந்துவிடுவார். செக் மூலம் வாடகை பணத்தை தருவார். பிரதமராக இருந்தபோது ஒருமுறை மன்மோகன் சிங் தனது வாடகைக்கான பணத்தை செக்காக வழங்கினார். ஆனால் அதனை encash செய்ய மறந்துவிட்டோம். அப்போது அவரே எங்களுக்கு கடிதம் எழுதி புதிய செக்கை அனுப்பி வைத்ததோடு, அதில் இருந்து வாடகை பணத்தை எடுத்து கொள்ளும்படி கூறினார். பிரதமராக இருந்தாலும் கூட அவரது இந்த செயல் எங்களை வியக்க வைத்தது. இளம் அரசியல்வாதிகள் மன்மோகன் சிங்கிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன'' என்றார். மன்மோகன் சிங் இந்த வீட்டை கடந்த 2019 ம் ஆண்டில் காலி செய்தார். அதன்பிறகு இந்த வீட்டை யாருக்கும் வாடகைக்கு வழங்கப்படவில்லை. மன்மோகன் சிங்கின் நினைவாக இந்த வீடு காலியாக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post