சென்னை: “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் குறைவாகப் பேசினார், ஆனால் அதிகமாக செயலாற்றினார்." என நினைவுகூர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் நேற்று இரவு 9.51 மணியளவில் பிரிந்தது. 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராகவும், அதற்கு முன்பு நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார் மன்மோகன் சிங். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் (1982-1985) மத்திய நிதி அமைச்சர் (1991-1996) என அவரது பொருளாதாரம் மற்றும் நிதிக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்தன.
எல்பிஜி (தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல்) மாடல் வளர்ச்சியானது நாட்டிற்கு ஒரு புதிய பாதையை உருவாக்கியது. ஒரு சிறந்த பொருளாதார நிபுணராகவும், திறமையான நிர்வாகியாகவும், ஒரு முன்மாதிரியான அரசியல்வாதியாகவும், அவரது பங்களிப்புகள் நாட்டின் வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளன. அவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அவரது குடும்பத்தினருக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் இந்தியாவை நிறைந்த அறிவுடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார், அவர் குறைவாகப் பேசினார், ஆனால் அதிகமாக செயலாற்றினார்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், அவரது ஈடு இணையற்ற பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியாவின் தலைசிறந்த பிரதமர்களில் ஒருவரும், உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநருமான மன்மோகன் சிங் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்தியாவின் அரசியல் வரலாற்றில் மன்மோகன் சிங் அவர்களுக்கு தவிர்க்க முடியாத இடம் உண்டு. 1990களின் தொடக்கத்தில் இந்தியா மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டு வந்த நேரத்தில், பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசில் நிதியமைச்சராக பொறுப்பேற்ற அவர், பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதன் வாயிலாக இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்திருப்பதற்கு அவர்தான் முதன்மைக் காரணம் ஆவார். 2004ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற போதும், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்டவர் மன்மோகன் சிங் அவர்கள். உலக நாடுகளின் தலைவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர் அவர். இந்தியாவின் மிக உயர்ந்த நிர்வாகப் பதவியை அடைந்த போதிலும் கூட, தனது எளிமையை விட்டுக்கொடுக்காத சிறந்த மனிதர்.
தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரதமராக இருந்த போது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பா.ம.க. முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்தவர். மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டை நிறைவேற்ற முடியாத சூழல் இருப்பதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட போது, அதை ஏற்றுக்கொள்ள நான் மறுத்தேன். எனினும் என்னை சமாதானப்படுத்த அவர் முயன்றார். ஆனால் நான் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை அறிந்து கொண்ட அவர், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஒப்புக் கொண்டார்.
மன்மோகன் சிங் அவர்களின் மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவரும், எனது பிரதமருமான மன்மோகன் சிங் அவர்கள் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தில்லியில் இன்றிரவு காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனது வாழ்நாளில் நான் மறக்க முடியாத தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் மன்மோகன் சிங். 2004&ல் அவரது தலைமையிலான அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது அவருக்கு வயது 72. எனக்கு அதில் பாதி வயது கூட இல்லை என்றாலும், என்னை மிகவும் மரியாதையுடன் நடத்தியவர். தேசிய ஊரக சுகாதார இயக்கம், புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், 108 அவசர ஊர்தி போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கான முன்மொழிவுகளை அவரிடம் முன்வைத்த போது, என்னை பாராட்டி ஊக்குவித்தவர். மருத்துவத் துறையில் 50 ஆண்டுகளில் செயல்படுத்த முடியாத திட்டங்களை 5 ஆண்டுகளில் செயல்படுத்திக் காட்டியதாக என்னைப் பாராட்டியவர். தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த அன்பு செலுத்தியவர்.
பொதுவாக, பொருளாதார வல்லுநர்களாக இருப்பவர்களுக்கு பொருளாதார வளர்ச்சி மட்டுமே கண்ணுக்குத் தெரியும்; கிராமப்புற மக்களின் துயரங்களை புரிந்துகொள்ள முடியாது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், இதற்கு முற்றிலும் விதிவிலக்கானவர் முனைவர் மன்மோகன்சிங் அவர்கள். கிராமப்புற மக்களுக்கு அனைத்து வகையான சுகாதார வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர், அதற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் என்னை ஊக்குவித்தவர்.
உலகின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவருடன் பணியாற்றியவன் என்ற பெருமிதத்தை எனக்கு வழங்கியவர் அவர். அவரது மறைவை ஏற்றுக்கொள்ள என் மனம் மறுக்கிறது. மன்மோகன் சிங் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பொருளாதார வல்லுநர்கள், சோனியா காந்தி அம்மையார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் அனைத்துநிலை தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.