சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஒரு தலைக்காதலுக்காக சத்யபிரியா என்ற பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் இன்று மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23).
காதல் தொல்லை: சதீஷிம், சத்யாவும் காதலித்து வந்துள்ளனர். பிறகு சதீஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை விட்டு மெல்ல பிரிய துவங்கியிருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாத சதீஷ், அவ்வப்போது சத்யாவை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு சதீஷ் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. எனினும் சத்யப்ரியா சதீஷின் காதலை ஏற்கவேயில்லை.
இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022 அக்டோபர் 13ம் தேதி கல்லூரிக்குச் செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, தாம்பரம் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார்.
ரயில்வே ஸ்டேஷன்: ரயில்வே ஸ்டேஷனிலேயே சத்யாவுக்கும் - சதீஷூக்கும் மோதல் வெடிக்க, மின்சார ரயில் வரும்போது, எட்டி உதைத்துள்ளார் சதீஷ்.. ரயில் கிட்ட வருவது தெரிந்துதான், செத்து போ என்று சொல்லி கொண்டே சத்யாவை தள்ளி விட்டதாக கூறப்பட்டது. இதில் சத்யாவின் உடல் ரயிலில் மோதி துண்டு துண்டாக சிதறி விழுந்தது. தலைநகரில் அன்று நடந்த இந்த கொலையானது, தமிழகத்தையே உலுக்கி எடுத்தது.
அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து, சதீஷை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.. எனக்கு கிடைக்காத சத்யா யாருக்கும் கிடைக்க கூடாது என்பதற்காக ரயில்முன்பு தள்ளி கொலை செய்தேன் என்று வாக்குமூலமும் தந்திருந்தார். இந்த கொலை வழக்கு விசாரணையானது, சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.. கைதான கொலையாளி சதீஷும் ஜாமீனுக்கு முயன்று தோற்றார்.. தற்போதுவரை சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.
இன்று தீர்ப்பு: இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி காவல்துறை தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டதாகவும், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 27ஆம் தேதி அறிவிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்றைய தினம் இந்த தீர்ப்பில் சதீஷுக்கு எந்த மாதிரியான தண்டனை விதிக்கப்படும் என்று தெரியவில்லை.. மகள் இறந்த துயரத்தை ஏற்க முடியாத தந்தை அன்றே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பெண்ணின் தாய் வரலட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில் அவரும் கடந்த வருடம் உயிரிழந்தார்.
காவல்துறை: இந்த வழக்கில் 70 சாட்சிகளிடம் சிபிசிஐடி காவல் துறை விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று சதீஷுக்கு வழங்கப்படும் தீர்ப்பை தமிழகமே எதிர்நோக்கி வருகிறது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.