ராய்ப்பூர்: பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு மாநில அரசுகள் பல வகையான உதவித் தொகை திட்டங்களை நடத்தி வருகிறது. அப்படி தான் சத்தீஸ்கர் அரசும் திருமணமான பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கி வருகிறது. அதில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் பெயரில் மாதம் தோறும் ரூ. 1,000 டெபாசிட் செய்யப்பட்டு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நவீனக் காலத்தில் பல்வேறு வகையான மோசடிகள் நடைபெறுகிறது. இதில் எப்படி மோசடி நடக்கும் என்று நாம் யோசிக்கும் திட்டங்களில் கூட மோசடி பேர்வழிகள் மிக ஈஸியாக மோசடி செய்கிறார்கள்.
அப்படியொரு சம்பவம் தான் இப்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது. அங்கே பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் பெயரில் யாரோ சிலர் மோசடி செய்துள்ளனர். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது பெண்கள் முன்னேற்றத்தை உறுதி செய்ய பல்வேறு திட்டங்களை அரசுகள் தொடங்கி நடத்தி வருகிறது. அதில் முக்கியமானது பெண்கள் உதவித் தொகை. தமிழக அரசு கூட உரிமை தொகை என்ற பெயரில் திருமணமான பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் இதுபோன்ற திட்டத்தை அறிவித்தன. மகளிர் இடையே இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் பல மாநில அரசுகளும் தொடர்ந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பாஜக அரசும் மஹ்தாரி வந்தன் யோஜனா என்ற பெயரில் திருமணமான பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது. தமிழ்நாட்டைப் போலவே சத்தீஸ்கரிலும் பெண்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக இந்தத் தொகை வரவு வைக்கப்படும். இதில் இப்போது அதிர்ச்சி என்னவென்றால் பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் பெயரில் இந்தத் திட்டத்தில் யாரோ பணம் பெண் வந்துள்ளனர்.
அதாவது சன்னி லியோன் பெயரில் போலியான வங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டு, அந்த வங்கிக் கணக்கிற்கு மாதாமாதம் உதவித் தொகையும் சென்றுள்ளது. மோசடியை சத்தீஸ்கர் அதிகாரிகள் இப்போது கண்டறிந்துள்ளது. சன்னி லியோன் பெயரில் அந்த போலிக் கணக்கைத் தொடங்கியது வீரேந்திர ஜோஷி என்ற நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து போலியாக வங்கிக் கணக்கு தொடங்கிய வீரேந்திர ஜோஷி என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் தகுதியான பயனாளிகளின் சரிபார்த்து ஒப்புதல் அளிக்க வேண்டிய அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பகுதியில் உள்ள தலூர் கிராமத்தில் தான் இந்த மோசடி நடந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி வங்கிக் கணக்கை முடக்க மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு மாவட்ட ஆட்சியர் ஹரீஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தி தொடர்புள்ள அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க அவர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கே அரசியல் அரங்கிலும் இது எதிரொலித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி விமர்சித்து வருகின்றன. இந்த உதவித் தொகை திட்டத்தில் பயன் பெறுவோரில் சுமார் 50 சதவீத பயனாளிகள் போலியானவர்கள் என்று மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக ஆட்சியில் பெண்கள் பலனடைவது பொறுக்க முடியாமல் காங்கிரஸ் இதுபோல ஆதாரமில்லாமல் பேசி வருவதாகப் பதிலடி கொடுத்துள்ள துணை முதல்வர் அருண் சாவோ, இந்த ஒரு விஷயத்தில் தவறு நடந்துவிட்டதாகவும் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்