சென்னை: சென்னையில் மெட்ரோ கட்டுமானத்தை முன்னிட்டு நகரின் முக்கிய சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகச் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
நமது தலைநகர் சென்னை எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் தமிழக அரசும் சென்னை மெட்ரோ நிர்வாகமும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமானது சென்னை மெட்ரோ.
தற்போது இரண்டு வழித்தடங்களில் சென்னை மெட்ரோ இயங்கி வரும் நிலையில், கூடுதலாக மூன்று ரூட்களில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இவை 2025 முதல் படிப்படியாகச் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது. இது முழுமையாகச் செயல்பாட்டிற்கு வர 2028 வரை ஆகும்.
சென்னை மெட்ரோ: இந்த மெட்ரோ கட்டுமானம் நகர் முழுக்க படுவேகமகா நடந்து வருகிறது. இந்த மெட்ரோ கட்டுமானம் காரணமாகச் சென்னையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இப்போது ஒயிட்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்து போலீசார் அறிவித்துள்ளனர். இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு இந்த போக்குவரத்து மாற்றம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகச் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாகச் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஒயிட்ஸ் சாலையில் செய்யப்பட உள்ள போக்குவரத்து மாற்றம்.
போக்குவரத்து மாற்றம்: சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகச் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் 28.01.2024 முதல் ஒரு வாரக் காலத்திற்குப் பின்வரும் போக்குவரத்து மாற்றங்களைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அண்ணா சாலை: பட்டுலாஸ் சாலை x ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை x திரு வி க சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.
அண்ணா சாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை x திரு விகா சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை x ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்குச் சென்றடையும். வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.