டாலரை எதிர்க்கவில்லை! பிரிக்ஸ் கரன்சி உருவாக்கும் திட்டமே இல்லை! இந்தியா திட்டவட்டம்! டிரம்ப் ஹாப்பி

post-img

சென்னை: அமெரிக்க டாலருக்கு போட்டியாக புதிய கரன்சியை தொடங்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.. பிரிக்ஸ் கரன்சி கொண்டு வரும் திட்டம் எல்லாம் எதுவும் இல்லை என்று என்று கத்தாரில் நடந்த டோஹா ஃபோரம் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களை உள்ளடக்கிய பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிய நாணயத்தை உருவாக்கவோ அல்லது டாலருக்குப் பதிலாக வேறு நாணயத்தை பயன்படுத்தவோ கூடாது என்று எச்சரித்து இருந்தார். இந்த நிலையில்தான் அமெரிக்க டாலருக்கு போட்டியாக புதிய கரன்சியை தொடங்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

பிரிக்ஸ் நாடுகளுக்கும் - அமெரிக்காவிற்கும் இடையே நல்ல உறவு உள்ளது, முதல் முறை டிரம்ப் ஆட்சி நடந்த போதும்.. அவர்களுடன் எங்களுக்கு மிகவும் உறுதியான உறவு இருந்தது. எங்கள் இரண்டு தரப்பிற்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்தன. ஆனாலும் பெரிய அளவில் மோதல் உள்ளது. டிரம்பின் கீழ் QUAD மீண்டும் தொடங்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
பிரிக்ஸ் கரன்சி கொண்டு வரும் திட்டம் எல்லாம் எதுவும் இல்லை. அப்படி நாங்கள் எதையும் ஆலோசனை செய்யவில்லை. பிரதமர் மோடிக்கும் ட்ரம்புக்கும் இடையே தனிப்பட்ட உறவு இருக்கிறது...டாலரை எதிர்க்க.. அல்லது துறக்க இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை. இப்போது பிரிக்ஸ் நாணயம் வேண்டும் என்ற திட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளோம். அதை பற்றி நாங்கள் விவாதிக்கவும் இல்லை.
BRICS நிதி பரிவர்த்தனைகள் பற்றி மட்டுமே விவாதம் செய்தோம்... அமெரிக்கா எங்கள் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும், டாலரை பலவீனப்படுத்துவதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை: சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது போஸ்டில், பிரிக்ஸ் குழு தனியாக நாணயம் ஒன்றை உருவாக்க பார்த்ததை அமெரிக்கா வேடிக்கை பார்த்த காலம் போய்விட்டது. பிரிக்ஸ் நாடுகள் புதிதாக நாணயம் எதையும் உருவாக்க கூடாது. இல்லையென்றால் ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தை பயன்படுத்த கூடாது.
அமெரிக்க டாலரை மட்டுமே இவர்கள் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு 100% கூடுதல் வரி விதிக்கப்படும். அமெரிக்காவில் அவர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் முடிவை கைவிட்டுவிடலாம். வேறு யாரவது ஏமாளி கிடைத்தால் அவர்களிடம் அவர்கள் போய் வியாபாரம் செய்யட்டும். பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வியாபாரத்தில் டாலரை தவிர வேறு எதையும் பயன்படுத்த கூடாது. டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உங்களுக்கு உள்ள உறவையும் துண்டித்துக்கொள்ளுங்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளது.

பிரிக்ஸ் நாணயம்: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வருடா வருடம் நடப்பது வழக்கம். கடந்த கூட்டத்தில் இவர்கள் பிரிக்ஸ் நாணயம் குறித்து மேலோட்டமாக ஆலோசனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Post