பெண் அமைச்சர் குறித்து அவதூறு.. சி.டி. ரவிக்கு ஜாமீன்! உடனடியாக விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

post-img
பெங்களூர்: கர்நாடக பெண் அமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் அம்மாநில பாஜக எம்எல்சி சி.டி ரவி கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு தற்போது ஜாமீன் கிடைத்திருக்கிறது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. நாடு முழுவதும் அமித்ஷாவுக்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்திருக்கின்றன. குறிப்பாக கர்நாடகாவில் அம்மாநில காங்கிரஸ் கட்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் பாஜகவுக்கும், அமித்ஷாவுக்கும் எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது. இப்படி இருக்கையில் இந்த பிரச்சனை அம்மாநில சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. தற்போது கர்நாடக சட்டமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமித்ஷா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பதிலுக்கு பாஜக எம்எல்ஏக்களும், எம்எல்சிக்களும் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டை அடுக்கினர். நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடைந்து கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாஜக எம்எல்சியும், தமிழக பாஜகவின் முன்னாள் மேலிட பொறுப்பாளருமான சி.டி ரவி, காங்கிரஸ் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். வழக்கத்திற்கு மாறாக ஒருமையிலும், அவதூறாகவும் சி.டி ரவியின் வார்த்தைகள் இருந்தது. மக்களின் குறைகளையும், சமூகத்தில் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டிய மக்கள் பிரதிநிதி ஒருவர் இப்படி அவதூறாக பேசியது காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது. குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சுவர்ண சவுதாவில் நடந்துக்கொண்டிந்தது. இது அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் சொந்த மாவட்டமாகும். சொந்த மாவட்டத்தில் வைத்து அமைச்சர் ஒருவர் அவமதிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாது, லட்சுமி ஹெப்பால்கரின் ஆதவாளர்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் ரவி மீது புகார் அளித்தனர். புகாரையடுத்து சட்டமன்றத்திற்குள் புகுந்து போலீசார் ரவியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அம்மாநில பாஜக தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை, ஒருவேளை ஜாமீன் கிடைக்காவிட்டால், ரவி சனி, ஞாயிறு வரை சிறையில்தான் இருக்க வேண்டும். எனவே, உடனடியாக ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தை ரவி தரப்பு நாடியது. ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி எம்.ஜி.உமா, உடனடியாக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். மட்டுமல்லாது ரவியை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Post