மதுரை: திருமணம் செய்வதாகக்கூறி தன்னிடம், பழகி ஏமாற்றியதாக கிறிஸ்துவ பாஸ்டர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை மாநகராட்சி பெண் ஊழியர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் குறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருவதாக தெரிகிறது.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்தவர் நந்தினி.. 28 வயதாகிறது.. இவர் தன்னுடைய வழக்கறிஞர் சுந்தர் என்பவருடன் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை தந்துள்ளார்.
நந்தினி: அந்த மனுவில் நந்தினி தெரிவித்துள்ளதாவது: "எனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்து, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். என்னுடைய பெற்றோர் இறந்து விட்டனர். மதுரை மாநகராட்சி மணடலம் 2-ல் வரி வசூல் மையத்தில் வேலை செய்கிறேன். மதுரை முனிச்சாலை பாலரெங்கபுரம் பகுதியிலுள்ள யேசுவின் நற்செய்தி சபை கூட்டத்துக்கு சென்றபோது, அந்த சபையிலுள்ள பாதிரியார் ஜான்ராபர்ட் என்பவர் மகன் பாஸ்டர் டோனிராய்ஸ் என்பவருடன் குடும்ப ரீதியாக பழக்கம் ஏற்பட்டது.
அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து, என்னை திருமணம் செய்வதாகக் கூறி பழகியது எனக்கு தெரியவில்லை. இருவரும் கடந்த 4 ஆண்டாக கணவன், மனைவியாக வாழ்ந்தோம்.
மிரட்டல்கள்: எனக்கு குழந்தை ஒன்றும் பிறந்தது. இதனால் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை வலியுறுத்தினேன். ஆனால், என்னை நம்ப வைத்து அவர் ஏமாற்றிவிட்டார்.. இந்நிலையில் கடந்த 1-ம் தேதி மதுரையில் ஜெயபாரத் ஹவுசிங் போர்டிலுள்ள டோனிராய்ஸ் வீட்டுக்கு சென்றபோது, அங்கிருந்த அவரது பெற்றோர், "எனது மகனை தேடி வரக்கூடாது, மகன் வேலை பார்க்கும் சர்ச்சுக்கும் போகக்கூடாது" என்று மிரட்டினார்கள்.
தொடர்ந்து செல்போனிலும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். மனைவி என்ற பெயரில் வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றும் என்னை சீரழித்தார். அவரது தேவைக்கென ரூ. 2 லட்சம் கடன் வாங்கி செலவு செய்தேன். டோனிராய்ஸ் மட்டுமின்றி அவரது பெற்றோரும் அவருக்கு உடந்தையாக இருந்து, எனக்கு எதிராக செயல்பட்டனர். டோனிராய்ஸ் மற்றும் அவரது பெற்றோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மீண்டும் புகார்: சில மாதங்களுக்கு முன்பும், மதுரையை சேர்ந்த பெண் ஒருவர், ஏர்வாடி மதபோதகர் சாமுவேல் மீது பாலியல் புகார் ஒன்றை தந்திருந்தார்.. 10 ஆண்டுகளாக நட்பாக சாமுவேல் பழகியதாகவும், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில், திடீரென சென்னையில் சேர்ந்த பிளசி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் கூறி போலீஸில் புகார் தந்திருந்தார். இந்நிலையில், மீண்டும் மற்றொரு பாதிரியார் மீது பாலியல் புகார் கிளம்பியிருப்பது மதுரையில் பரபரப்பை தந்து வருகிறது.