சென்னை: ‛வீலிங்' செய்து விபத்தில் சிக்கி காயமடைந்த யூடியூபர் டிடிஎப் வாசனை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவரது ஜாமீன் மனுவை 2 முறை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடியான நிலையில் ‛நான் ஒரு அப்பாவி' எனக்கூறி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் விலையுயர்ந்த பைக்குகளில் டிராவல் செய்தும், சாகசம் செய்தும் யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார். இவரை ஏராளமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎப் வாசன் பல இடங்களில் விதிகளை மீறி பைக் ஓட்டியதாகவும், அதிக வேகத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பைக் ஓட்டியதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக தமிழ்நாட்டில் பல போலீஸ் நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அவர் மட்டும் தனது செயலை மாற்றிக்கொள்ளவில்லை. தொடர்ந்து பைக்குகளில் சாகசம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த மாதம் டிடிஎப் வாசன் விலையுயர்ந்த தனது பைக்கில் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்றார். அப்போது வீலிங் செய்ய முயன்றார். இந்த சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்தில் சிக்கியது. இதில் டிடிஎப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் டிடிஎப் வாசன் மீது வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல், பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் மீண்டும் காணொலி காட்சி மூலம் அவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 16ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனால் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டும். இதற்கிடையே தான் டிடிஎப் வாசன் சார்பில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "நான் அப்பாவி. எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை. எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்தது. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன். ஜாமீன் தாருங்கள்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபபட்ட தினத்தில் டிடிஎப் வாசன் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அமர்வு நீதிமன்றம் எண் 2ல் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு கடந்த மாதம் 22ம் தேதியும், அதன்பிறகு கடந்த மாதம் 26ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இத்தகைய நிலையில் தான் டிடிஎப் வாசன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.