ஏகப்பட்ட ஊழல் புகார்கள்.. சோமையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தகுதி நீக்கம்.. கோவை கலெக்டர் அதிரடி

post-img

கோவை: கோவையில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ப.ரங்கராஜ் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதால் அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் ரங்கராஜை தகுதி நீக்கம் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில், மாவட்ட ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் ரங்கராஜை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் பல்வேறு உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வாகினர். அப்படி சோமையம்பாளையம் ஊராட்சியில் உள்ளாட்சி பிரதிநிதியாகத் தேர்வான ஒருவர் மீது இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னணி: கோவை மாவட்டத்தில் உள்ள சோமையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தவர் ப.ரங்கராஜ். ஊராட்சி மன்ற விதிகளை மீறி, ரங்கராஜ் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருவதாக அதே சோமையம்பாளையம் ஊராட்சியில் இதற்கு முன்பு துணைத் தலைவராக இருந்த ஆனந்தகுமார் சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அதில் ரங்கராஜ் மீது பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டு இருந்தது. மலைதள மேம்பாட்டுக் குழுமத்திடம் இருந்து உரிய அனுமதி பெறாமல் சோமையம்பாளையம் ஊராட்சியில் தொழிற்சாலைகளுக்கும் குடியிருப்பு கட்டடங்களுக்கும் வரைபட அனுமதி வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், குப்பை அகற்றும் பணிகள், சுகாதாரப் பணிகளுக்கும் விதிமுறைகளை மீறி செலவினம் மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
புகார்: கொரோனா காலகட்டத்தில் சுகாதாரப் பொருட்கள், ப்ளீச்சிங் பவுடர் ஆகியவற்றை அதிக விலைக்கு வாங்கியதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. இது தவிரக் குடிநீர் குழாய் பராமரிப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வது, தெருவிளக்கு பராமரிப்பு & கொள்முதல், மோட்டார் மற்றும் உதிரிப் பாகங்களைக் கொள்முதல் செய்வது எனப் பலவற்றில் இவர் முறைகேடு செய்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது. அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளில் கூட முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையே ஊராட்சி மன்ற தலைவர் மீதான புகார்களில் பல்வேறு புகார்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவரை தகுதி நீக்கம் செய்வதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளின் பதவிக்காலம் அடுத்தாண்டு தொடக்கத்தில் நிறைவடையும் நிலையில், சென்னை ஐகோர்ட் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
உத்தரவு: மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஐகோர்ட், மாவட்ட ஊராட்சிகளின் ஆய்வாளரான கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி, சோமையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த ரங்கராஜை தகுதி நீக்கம் செய்வதாகக் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

Related Post