21 நாள் தலைமறைவாக இருந்தேன்! போலீஸில் சிக்காமல் பாதுகாத்தவரே

post-img

சிவகாசி: 21 நாட்கள் தலைமறைவாக இருந்த என்னை பாதுகாத்தவரே எஸ்.பி.வேலுமணிதான் என அவரை பாராட்டுவதாக நினைத்து அவருடைய சட்டவிரோத செயலை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டுக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசியில் விருதுநகர் மேற்கு , கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேசுகையில் உங்கள் மத்தியில் நான் ஒரு உண்மையை சொல்கிறேன் கேளுங்கள். எனக்கு திமுக ஆட்சியில் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது என்னை பாதுகாத்தவர் எஸ்.பி.வேலுமணிதான். 21 நாட்கள் என்னை எங்கெல்லாம் அழைத்துச் சென்றார்கள் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.


தொண்டர்களுக்குத் தோழனாக உழைக்கக் கூடிய அண்ணன் வேலுமணி என்னையும் பாதுகாத்தார். தற்போது எங்கு பார்த்தாலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் விவாதம் நடந்து வருகிறது. இந்த காலம் திமுகவுக்கு இறங்குமுகம், அதிமுகவுக்கு ஏறுமுகம். அண்ணன் வேலுமணிக்கு திமுக எந்த அளவுக்கு இடைஞ்சல் கொடுக்கிறது என்பது நமக்கெல்லாம் தெரியும்.


வேலை செய்யக் கூடியவர்களை முடக்கிவிடும் வேலையில் திமுக ஈடுபட்டுள்ளது. திமுகவின் இந்த நடவடிக்கையானது இன்று கேலிக்குரியதாகிவிட்டது. திமுகவுக்கு எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு அலை உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் கண்டு திமுகவினரும் தமிழக முதல்வரும் அலறுகிறார்கள். இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்கான சூழல் உருவாகிவிட்டது.



பிறரை கெடுக்க நினைத்தவர்கள் இன்று கெட்டுப் போய் உள்ளனர். வருங்காலம் அதிமுகவின் காலம்தான் என ராஜேந்திர பாலாஜி பேசினார். குற்றவாளியை விட குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள்தான் முதல் குற்றவாளி என சட்டம் சொல்கிறது. அப்படிப்பட்ட நிலையில் போலீஸிடம் சிக்காமல் தன்னை பாதுகாத்தவர் எஸ்.பி.வேலுமணிதான் என ராஜேந்திர பாலாஜி நெகிழ்ச்சியாக சொல்வதாக நினைத்து அவரின் சட்டவிரோத செயலை போட்டுக் கொடுத்துள்ளார் என்பதாகவே பார்க்கப்படுகிறது.


பின்னணி என்ன: ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.


அதைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி அன்றைய தினம் முதல் தலைமறைவானார். இதை விருதுநகர் காவல் துறையே அறிவித்தது. இந்த நிலையில் விருதுநகரில் நடந்த அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை கூட அவசர அவசரமாக முடித்துக் கொண்டு வெவ்வேறு கார்களில் அவர் மாறி மாறி சென்றுள்ளதாக கூறிய நிலையில் அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.


இந்த நிலையில்தான் 21 நாட்கள் கழித்து மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடகா மாநிலம் ஹாடன் பகுதியில் தலைமறைவாக இருந்த போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது கூட அவர் தப்ப முயன்ற போது போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

 

Related Post