கிருஷ்ணகிரி: கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கொத்து கொத்தாக விலகி வருவது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து மீண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் விலகியதோடு சீமானால் தங்கள் பொருளாதாரத்தை இழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
என்ன தான் ஆச்சு நாம் தமிழர் கட்சிக்கு என்பது போல் தான் கடந்த சில மாதங்களாக கட்சி தாவல்கள், விலகல் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. நீண்ட நாட்களாக அண்ணன் சீமான் உடன் பயணித்த நாம் தமிழர் தம்பிகள் அடுத்தடுத்து கொத்துக் கொத்தாக விலகி வருகின்றனர்.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களாக அறியப்பட்ட கல்யாண சுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் திமுகவிலும் அதிமுகவிலும் இணைந்தனர். இதை அடுத்து தற்போதும் ஏராளமான இளைஞர்கள் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
சீமானின் செயல்பாடுகள் காரணமாகவே நிறைய இளைஞர்கள் நிர்வாகிகள் தற்போது வேறு கட்சிகளுக்கு தாவி வருகின்றனர் என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள். அந்த வகையில் சீமான் மீது அதிருப்தியில் இருந்த
கிருஷ்ணகிரி பிரபாகரன், விழுப்புரம் வடக்கு சுகுமார், விழுப்புரம் மேற்கு பூபாலன், விழுப்புரம் மத்திய மணிகண்டன், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி, திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் வெளியேறினர்.
மேலும், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம், நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி அமைப்பின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர துணை தலைவர் பொறுப்பிலிருந்து ஜீவானந்தம் ஆகியோர் விலகினர். தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், நெல்லை மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் கண்ணன், இளைஞர் பாசறை நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் பார்வின், குருதி கொடை பாசறை மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோனி விஜய் உட்பட 30 நிர்வாகிகள் கூண்டோடு விலகினர்.
கடந்த வாரம் நாம் தமிழர் கட்சியில் இருந்து தர்மபுரி மாவட்ட முக்கிய பொறுப்பார்கள் விலகியுள்ள நிலையில், தற்போது கிருஷ்ணகிரியின் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளர் சூர்யா மற்றும் அவர் தலைமையில் பிற நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட நானூறுக்கும் மேற்பட்டோர் அந்த கட்சியில் இருந்து மொத்தமாக விலகி உள்ளனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் உழைத்த தங்களுக்கு பதவி கிடைக்கவில்லை, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. மேலும் நிர்வாகிகளான தங்களுக்கு உரிய மதிப்பு கூட கொடுப்பதில்லை என குற்றச்சாட்டு வைக்கும் சூர்யா தரப்பு. நாம் தமிழர் கட்சியால் தங்கள் பொருளாதாரத்தை இழந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்தவர்களை விட்டுவிட்டு நேற்று வந்தவர்கள், பணம் கொடுப்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நடந்த தேர்தல்களிலும் வரும் தேர்தல்களிலும் அவர்களுக்கே வாய்ப்பு அளிக்கப்படும் என தலைமை கூறி வருகிறது. இதனால் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் கட்சியை விட்டு விலகுகிறோம். மேலும் பல மாவட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து விலக உள்ளனர். வரும் தேர்தலில் எங்கள் தரப்பு நியாயத்தை முன் வைப்போம்" என்றார்.