கோவை: கோவை குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பாட்ஷாவை, 'அப்பா' என்று அழைத்த சீமான், பாஷா மரணத்துக்கு வீரவணக்கம் தெரிவித்த திருமாவளவன் ஆகியோரது செயல் ஓட்டுப்பிச்சை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இந்நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 1998ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அவரை ஆதரித்து பாஜக முக்கிய தலைவரான அத்வானி பிரச்சாரம் செய்வதற்காக பிப்ரவரி 14-ஆம் தேதி கோவை வருவார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அதற்கு முன்னதாக கோவையின் 12 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் அத்வானியின் பயணம் ரத்து செய்யப்பட்டது முன்னதாக 1997 ஆம் ஆண்டு செல்வராஜ் என்ற காவலர் கொலை செய்யப்பட்ட நிலையில் கோவையில் பல பகுதிகளில் நடைபெற்ற கலவரம் குண்டு வெடிப்பாக மாறியது. இந்த சம்பவத்திற்கு அல் உம்மா அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
குறிப்பாக அல் உம்மா இயக்கத்தின் தலைவரான கோவை எஸ் ஏ பாஷா கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையே வயது முதிர்வு காரணமாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறை விடுப்பில் வெளியில் வந்தார். ஆனால் தொடர்ந்து அவரது உடல் மோசமான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.
இதனையடுத்து கோவையில் உள்ள அவரது மகன் சித்திக் வீட்டில் பாட்ஷாவின் உடல் வைக்கப்பட்டு பூ மார்க்கெட் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து பரபரப்பான சூழல் நிலவியதால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே தொடர்ந்து பாட்ஷாவின் மரணத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் கோவை பாஷாவின் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த காவல்துறையை கண்டித்து கோவையில் கண்டன பேரணி நடைபெறும் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதை அடுத்து இன்று கருப்பு தின பேரணி நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்களை காவல்துறை கைது செய்தது.
முன்னதாக பேரணியில் பேசிய அண்ணாமலை, கோவை குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பாஷாவை, 'அப்பா' என்று அழைத்த சீமான், பாஷா மரணத்துக்கு வீரவணக்கம் தெரிவித்த திருமாவளவன் ஆகியோரது செயல் ஓட்டுப்பிச்சை என கடுமையாக விமர்சித்தார்.