டெல்லி: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய புகாரில் லோக்சபாவின் காங்கிரஸ் குழு தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மீதான நடவடிக்கை என்பது ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் உள்ள லோக்சபாவில் காங்கிரஸ் குழு தலைவராக இருப்பவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் மோடி குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது.
அதாவது மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியை பேச வைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீது கடைசி நாளான ஆகஸ்ட் 10ம் தேதி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார்.
அப்போது அவர் பிரதமர் மோடியை திருதிராஷ்டிரனுடன் ஒப்பிட்டுப் பேசி விவாதத்தை கிளப்பினார். இதுதொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ‛‛மன்னன் திருதராஷ்டிரன் குருடனாக அமர்ந்திருந்த போது, திரவுபதியின் ஆடைகள் பறிக்கப்பட்டன. அதேபோல் இன்று நம் அரசனும் குருடனாக அமர்ந்திருக்கிறார்'' எனக்கூறியது தான் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குரல் வாக்கெடுப்பின் மூலம் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி லோக்சபாவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் சபாநாயகர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதனால் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் மோடியின் பதிலுரையில் பங்கேற்க முடியாமல் போனது. இதற்கிடையே தான் ஆதிர் ரஞ்சனின் பேச்சு குறித்து அவர் நாடாளுமன்ற குழுவில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி இன்று அவர் நாடாளுமன்ற குழுவில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை என்றார்.
மாஸா.. கெத்தா! தந்தை ராஜீவ் சொன்ன ஒற்றை வார்த்தை! ஆளே மாறிப்போன ராகுல்.. லடாக்கில் பைக் ரைட்! செம
இதையடுத்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கத்தை ரத்து செய்ய நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான உத்தரவை ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீண்டும் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.