ஹரியானா அட் ராசிட்டி.. முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை! 50 பஞ்சாயத்துகள் முடிவு

post-img

கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஹரியானா மாநிலம் நுஹில் வெடித்த மத வன்முறை, குர்கான், மேவாட், பானிபட் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹரியானாவின் தெற்கு பகுதிகளில் ஏற்பட்ட இந்த வன்முறையின் தாக்கம் இன்னும் குறையவில்லை. தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் ஹரியானாவின் ரேவாரி, மஹேந்தர்கர் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 50 பஞ்சாயத்துகள் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்து உள்ளன. இந்த 50 பஞ்சாயத்துகள் வெளியிட்ட கடிதங்களும் ஒரே மாதிரியாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

பஞ்சாயத்து தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட இந்த கடிதங்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிப்பது மட்டுமின்றி, தங்கள் கிராமங்கள் மற்றும் அதற்கு அருகே வசிக்கும் முஸ்லிம்கள் அடையாள ஆவணங்களை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த கிராமங்களில் சிலரை தவிர பெரும்பாலான முஸ்லிம்கள் 3, 4க்கும் மேற்பட்ட தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அவர்களுக்கு தடை விதிப்பதாக பஞ்சாயத்துகள் வெளியிட்டு இருக்கும் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. "எந்த மத உணர்வுகளையும் காயப்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல." என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மஹேந்தர்கர் மாவட்டம் நர்னால் துணைப் பிரிவு மாஜிஸ்திரேல் மனோஜ் குமார், தனியார் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "அந்த கடிதங்களின் அச்சுகள் எனக்கு கையில் கிடைக்கவில்லை. சமூக வலைதளங்களில் அவற்றை பார்த்தேன். இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்.

இது சட்டத்துக்கு புறம்பான செயலாகும். சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இந்த கிராமங்களில் 2 சதவீதம் கூட இல்லை. அனைவரும் மத நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள். இதுபோன்ற நோட்டீஸ்கள்தான் நல்லிணக்கத்தை கெடுக்கின்றன." என்றார். இதுகுறித்து மஹேந்தர்கர் மாவட்டம் சைத்புர் பஞ்சாயத்து தலைவர் விகாஸ் தெரிவிக்கையில், "நுஹ் வன்முறையால் இவ்வாறு செய்தோம்.

கடந்த ஜூலை மாதம் எங்கள் பகுதியில் பல திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. வெளியாட்கள் ஊருக்கு வருவதால்தான் இதுபோன்ற குற்ற சம்பங்கள் நடந்து வருகின்றன. நுஹ் வன்முறைக்கு பிறகு நாங்கள் ஆகஸ்டு ஒன்றாம் தேதி பஞ்சாயத்து கூடி வெளியாட்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது என்ற முடிவை எடுத்தோம்.

இவ்வாறு செய்வது சட்ட விரோதம் என்று எனது சட்ட ஆலோசகர் தெரிவித்தவுடன் அந்த நோட்டீசை திரும்ப பெற்றுவிட்டோம். எப்படி அது சமூக வலைதளங்களில் பரவியது என்று தெரியவில்லை." என்றார். இந்த நிலையில் விகாஷ்தான் இதுபோன்ற நோட்டீசை தயாரித்து கையெழுத்திட சொன்னதாகவும், மற்றவர்கள் செய்ததால் தாமும் கையெழுத்திட்டதாக மற்றொரு பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மஜீத் என்ற முஸ்லிம் வியாபாரி தெரிவிக்கையில், "நாங்கள் 4 முதல் 5 தலைமுறைகளாக இதே பகுதியில் வசித்து வருகிறோம். இதுதான் எனது வீடு. நாங்கள் அனைவரும் ஒன்றாகவே வசித்து வருகிறோம். நுஹ் சம்பவம் நடந்த பிறகு பிரிந்து கிடக்கிறோம்." என்று தெரிவித்து இருக்கிறார்.

Related Post