இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட்டு உள்ள அதானி குழுமத்தின் 10 நிறுவன பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு சுமார் 55000 கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.
அதானி குழுமம் தனது அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு எப்படிப்பட்ட பிம்பத்தை காட்டியுள்ளது, எந்த விபரங்களை பகிர்ந்துள்ளது என்பதை அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வுக்கு முக்கிய காரணம் ஷாட் செல்லரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் அதானி குழுமம் தனது நிறுவனம் பங்கு விலைகளை உயர்த்த வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது.
இதன் வாயிலாக தான் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்களுக்கு அதானி குழுமம் எவ்விதமான தரவுகளை பகிர்ந்துள்ளது என ஆய்வு செய்ய துவங்கியுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இந்த செய்தி ரீடைல் முதலீட்டாளர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரையில் அனைவரையும் பாதித்துள்ளது.
இன்றைய வர்த்தக சரிவின் மூலம் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பீடு 54,686 கோடி ரூபாய் அளவிலான இழப்பை எதிர்கொண்டு 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டை இழந்து 9,73,200 கோடி ரூபாய் அளவீட்டை இன்றைய வர்த்தக முடிவில் எட்டியுள்ளது. வியாழக்கிழமை வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 10,27,886 கோடி ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும பங்குகளின் நிலவரம் என்ன?
அதானி எண்டர்பிரைசஸ் - 6.79 சதவீதம் சரிவு
அதானி போர்ட்ஸ் - 4.16 சதவீதம் சரிவு
அதானி பவர் - 5.61 சதவீதம் சரிவு
அதானி டிரான்ஸ்மிஷன் - 6.38 சதவீதம் சரிவு
அதானி கிரீன் எனர்ஜி - 1.50 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 3.21 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 3.42 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 3.46 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 4.19 சதவீதம் சரிவு
NDTV - 3.73 சதவீதம் சரிவு