விருதுநகர்: திமுக அரசு கூட்டணியை காப்பாற்றுவதில் மட்டும்தான் கவனமாக உள்ளது. அதிமுக அரசு தொடங்கிய திட்டங்களைத்தான் திறந்து வைத்து வருகிறது. திமுக தொண்டர்களே வெறுக்கும் வகையில்தான் இந்த ஆட்சி நடக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பரபரப்பாக பேசியுள்ளார்.
விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் தமிழ்நாட்டு அரசியலில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை சித்தாந்த எதிரி என்றும் குறிப்பிட்டிருந்தார். ஒருபக்கம் திமுகவில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறி வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற எல்லோருக்குமான அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், 2026 இல் திமுக கூட்டணி மைனஸ் ஆகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், விசிக தலைவர் திருமாவளவனால் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க இனி நம்முடன் தான் இருக்கும் என்று கூறியிருந்தார். வேங்கை வயல் சம்பவத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை. வெள்ளப் பாதிப்பின் போது சம்பிரதாயத்துக்கு ட்வீட் போடுவது, அறிக்கை விடுவது, வெள்ளத்தில் இறங்கி போட்டு எடுத்துக்கொள்கின்றனர்.
இதுபோன்று இல்லாமல் உணர்வுப்பூர்வமாக மக்களுக்கு உதவ வேண்டும். ஆனால், இதைப் பற்றி கவலைப்படாமல் இருமாப்போடு எகத்தாளமாக கூட்டணி கட்சிகள் இருக்கிறது என 200 தொகுதிகளில் வெல்வோம். உங்களுக்கு மக்களோடு மக்களாக இருந்து ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். வரும் 2026 தேர்தலில் நீங்க நம்பிய கூட்டணி கணக்குகள் உங்களுக்கே மைனஸ் ஆக மாறும் என்று பேசியிருந்தார்.
அதேபோல, ஆதவ் அர்ஜூனா பேசுகையில், தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. அது அகற்றப்பட வேண்டும். பிறப்பால் இன்னொரு முதல்வர் பதவியேற்க கூடாது என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், திமுக அரசு கூட்டணியை காப்பாற்றுவதில் மட்டும்தான் கவனமாக உள்ளது. கூட்டணி பலத்துடன் ஆட்சியமைத்து விடலாம் என திமுக கணக்குப் போடுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பரபரப்பாக பேசியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அதிமுக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பயணம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவு கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது அந்தப் பிரிவு செயலற்று உள்ளது. இதனால், பட்டாசு விபத்தில் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திமுக அரசு சார்பில் வாங்கப்பட்டு வரும் கடன் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டு வருகிறது. அதிமுக அரசு நிதி ஒதுக்கி தொடங்கிய திட்டங்களைத்தான், தற்போது திமுக அரசு திறந்து வைத்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 8 குடிநீர் திட்டங்களில் 5 திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
மக்களுக்கான திட்டங்களில் கவனம் செலுத்தாமல், திமுக அரசு கூட்டணியை காப்பாற்றுவதில் தான் கவனமாக உள்ளது. 2026 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்து விடலாம் என திமுக கணக்கு போடுகிறது. ஆனால், திமுக தொண்டர்களே வெறுக்கும் வகையில்தான் இந்த ஆட்சி நடக்கிறது. 2026 இல் அதிமுக ஆட்சி அமைய கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைத்து உழைக்க வேண்டும் என்றார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage