பிக் பாஸ் சீசன் 7-ல் பங்கேற்கப் போகும் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த விபரம் தற்போது வெளிவந்துள்ளது. டிவி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்போரின் விருப்பமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக பிக்பாஸ் இருந்து வருகிறது. வெளிநாடுகளிலும், இந்திய மொழிகளில் இந்த மாடல் நிகழ்ச்சிகள் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தமிழிலும் 6 சீசன்களாக இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். வரவிருக்கும் 7 ஆவது சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டு புரொமோக்கள் வெளிவந்துள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் போட்டியாளர்கள் யார் என்கிற விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அதுகுறித்த தகவல்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.
சீசன் 6 இல் இடம்பெற்றிருந்த ரச்சிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷ் கோபாலசாமி சீசன் 7-ல் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதேபோன்று பிரபல நடிகை ரேகா நாயர், நடிகர் பப்லூ பிரித்விராஜ் ஆகியோரும் சீசன் 7 இல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக்பாஸ் சீசன்7 எப்போது ஆரம்பிக்கும் என்கிற விபரத்தை ஸ்டார் விஜய் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், அக்டோபர் மாதம் 2 ஆவது வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.